Food : ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறும் 5 உணவுகள்.! மருத்துவர்கள் எச்சரிக்கை.!

5 Foods become toxic when refrigerated
வளர்ந்துவிட்ட தொழில்நுட்பமானது வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றியுள்ளது. மைக்ரோவேவ் அடுப்பு தொடங்கி குளிர்சாதன பெட்டி வரை பல மின்சாதனப் பொருட்கள் சமையலறையை ஆக்கிரமித்துள்ளன. அதே சமயம் இது நோய்கள் பரவவும் காரணமாக அமைகின்றன. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் பொருட்கள் விஷமாக மாறுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்சாதனப் பெட்டிகளில் உணவை வைப்பதன் முக்கிய நோக்கம் உணவின் வெப்பத்தை குறைத்து, அதை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பதே ஆகும். அதே சமயம் குடல் நோய் நிபுணான டாக்டர் டிம்பிள் ஜண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் விஷமாக மாறும் நான்கு உணவுகளை பட்டியலிட்டுள்ளார்..
பூண்டு
அதில் அவர், தோல் நீக்கப்பட்ட பூண்டுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது என பரிந்துரைத்துள்ளார். தோல் நீக்கப்பட்ட பூண்டுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் பொழுது அது விரைவில் பூஞ்சை பிடிக்க தொடங்குவதாக கூறியுள்ளார். புஞ்சை நிரம்பிய பூண்டை சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதன் அத்தியாவசிய எண்ணெய்களை அழித்து சுவையை குறைக்கக் கூடும் என அவர் கூறியுள்ளார். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பூண்டு சமைக்கப்படும் பொழுது மென்மையாக மாறி அதன் தன்மையை இழந்து விடும் என்றும், எப்போதும் பூண்டை தோலுடன் வாங்கி சமைப்பதற்கு முன்பு மட்டுமே உரித்து பயன்படுத்த வேண்டும் என்றும், அதை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது என டிம்பிள் கூறியுள்ளார்
வெங்காயம்
அதேபோல் வெங்காயத்தையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம் என மருத்துவர் டிம்பிள் கூறியுள்ளார். வெங்காயம் குறைந்த வெப்பநிலையை எதிர்க்கும் தன்மை உடையது. அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் பொழுது ஸ்டார்ச் சர்க்கரை ஆக மாறி பூஞ்சை பிடிக்கத் தொடங்குகிறது. பெரும்பாலும் மக்கள் வெங்காயத்தை பாதியாக வெட்டி, மற்ற பாதியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஒருபோதும் அவ்வாறு செய்யக்கூடாது. வெங்காயமானது சுற்றுப்புறங்களில் இருந்து அனைத்து ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களையும் பிடித்து தன்னகத்தே வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. இதன் காரணமாக வெங்காயத்தில் பூஞ்சை பிடிக்கத் தொடங்குகிறது. எனவே பாதியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. தேவைப்படும் நேரத்தில் தோல்களை உரித்து வெங்காயத்தை உணவில் பயன்படுத்த வேண்டும்...
இஞ்சி
இஞ்சி ஒரு ஆரோக்கியமான மருத்துவம் நிறைந்த உணவுப் பொருளாகும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அது முளைவிடத் தொடங்கலாம். முளைவிட்ட இஞ்சியை சாப்பிடுவது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழி வகுக்கலாம். எனவே இஞ்சியை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. இஞ்சி என்பது உணவில் மட்டுமல்லாமல் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைப் பொருளாகும். இஞ்சியை சாப்பிடுவது அஜீரணக் கோளாறுகளை நீக்குவது, மலச்சிக்கல் மற்றும் பிற வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்க உதவும். இதில் ஆக்சிஜனேற்றிகளும் நிறைந்துள்ளன. எனவே இஞ்சியை புதிதாக வாங்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துதல் கூடாது...
சாதம் மற்றும் உருளைக்கிழங்கு
சமைத்த அரிசியை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் சாதத்தில் வேகமாக பூஞ்சைகள் வளரும். சாதத்தை ஒருவேளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க நேர்ந்தால் 24 மணி நேரத்திற்கு மேல் அதை வைக்கக் கூடாது .அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சாதத்தை சூடாக்கி சாப்பிடக்கூடாது. இது தவிர உருளைக்கிழங்கையும் குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது நல்லது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கின் அமைப்பு மற்றும் சுவையை பாதுகாக்க அறைவெப்ப நிலையில் காகிதப்பையில் சேமித்து வைப்பது சிறந்தது. குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலமாக அது முளைவிடத் தொடங்கலாம். முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கலாம். அதை போல் குடைமிளகாய் மற்றும் பால் சார்ந்த இனிப்புகளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்...
தேவையான அளவு உணவுகளை சமையுங்கள்
குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை வைப்பது என்பது அதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கிறது. உணவுப் பொருட்களின் நிறம், சுவை, அமைப்பை இழக்க செய்கிறது. இறைச்சி மற்றும் பிற தேவையானப் பொருட்களை மட்டுமே குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகள் மீதமாகிவிட்டால் குளிர்சாதன பெட்டியில் திணிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை கைவிட வேண்டும். தேவையான அளவு மட்டுமே உணவு தயாரித்து, அதை அந்த நேரத்தில் சாப்பிட்டு விடுங்கள். அளவுக்கு அதிகமாக சமைப்பது, காய்கறிகளை நீண்ட நாட்களாக குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது என உணவை விஷமாக்கி விடாதீர்கள்..
.