நாய்களுக்காக Ferrari காரை விற்ற தொழிலதிபர்! தற்கொலை முயற்சியை தடுத்த நாயால் மனமாற்றம்! சுவாரசியம்

டோக்கியோ: ஜப்பானில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விரக்தியடைந்த தொழிலதிபர் தற்கொலை செய்ய முயன்றார். கடைசி நேரத்தில் அவர் செல்லமாக வளர்த்த நாய் தற்கொலை செய்ய விடாமல் தடுத்தது. இதையடுத்து மனம் மாறிய தொழிலதிபர் நாய்களை பராமரிப்பதிலேயே முழு நேர வேலையாக செய்து வருகிறார். தனது நிறுவனத்தை மூடி, பெஃராரி காரை விற்பனை செய்து நாய், பூனை உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளர்ப்பு மையத்தை அமைத்து உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் ஹிரோடாகா சாய்டோ. இவருக்கு 54 வயது ஆகிறது. தொழிலதிபரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டார். அவர் கடன் வாங்கி தனது நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க முயன்றார்.
ஆனால் முடியவில்லை. தனது நிறுவனத்தை காப்பாற்ற சாய்டோ எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைக்கொடுக்கவில்லை. மேலும் அவருக்கு கடன் அதிகரித்தது.
இதனால் மனம் நொந்துபோன சாய்டோ வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். அவர் தற்கொலை முடிவை எடுத்தார். இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். அப்போது அவர் செல்லமாக வளர்த்து வரும் கொழுகொழுப்பாக 70 கிலோ எடையுடன் இருக்கும் நாய் விடவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் அந்த நாய் தடுத்தது. மேலும் கதவை பூட்டி அவரை வெளியே செல்ல விடாமல் தடுத்தது.
இதையடுத்து வீட்டில் சற்று நேரம் இருந்த சாய்டோ தனது தற்கொலை முடிவை மாற்றினார். தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல. நஷ்டத்தை சமாளிக்கலாம். கடனை திரும்ப அடைப்பது பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். தனது நிறுவனத்தை மேற்கொண்டு நடத்த முடியாததால் அவர் அதனை மூடினார்..
மேலும் தனது உயிரை காப்பாற்றிய நாய்க்கு நன்றிக்கடன் செலுத்த முடிவு செய்தார். அதன்படி தெருக்களில் ஆதரவின்ற சுற்றி வரும் நாய் மற்றும் வீட்டில் ஆக்ரோஷமாக இருக்கும் நாய்களை அழைத்து வந்து பாராமரிக்க முடிவெடுத்தார். தெருநாய்களை பிடித்து வந்து உணவு வழங்கினார். நாய்கள் மட்டுமின்றி ஆதரவின்றி தவிக்கும் பிற உயிரினங்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து நாய், பூனை உள்ளிட்ட பல உயிரினங்களை பாதுகாக்க அவர் இருப்பிடம் உருவாக்க முடிவு செய்தார். இதையடுத்து யாய்சு என்ற இடத்தில் அவர் உயிரின பாதுகாப்பு மையத்தை தொடங்கினார். இதற்காக அவர் வைத்திருந்த விலையுயர்ந்த ஃபெராரி காரை விற்பனை செய்தார். அதில் இருந்து கிடைத்த பணத்தை வைத்து இந்த மையத்தை உருவாக்கினார். தற்போது இங்கு 40 நாய்கள், 8 பூனைகள் உள்ளன. வீட்டில் அடங்காமல் ஆக்ரோஷமாக இருக்கும் நாய்களை அவர் தத்தெடுத்து இங்கு வளர்க்கிறார்...
இதுதொடர்பாக சாய்டோ கூறுகையில், ‛‛நான் தற்கொலை செய்ய முடிவு செய்தபோது என்னை என் நாய் தான் காப்பாற்றியது. இதனால் என்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை நாய்களின் நலனுக்காக செலவிட முடிவெடுத்துள்ளேன். எனது அனைத்து பணத்தையும் நாய்களுக்காக செலவிட உள்ளேன். நாம் நாய்களை விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். நன்றாக இருப்பதை உணர முடிந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்'' என்றார்...