பிரசார சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல் பிரசார பயணத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) கோவை மாநகரப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.
வடவள்ளி பேருந்து நிலையத்தில் உரையாற்றி பயணத்தைத் தொடங்கிய அவர், லாலி ரோடு, சாய்பாபா கோயில், வடகோவை, பூமார்க்கெட், மரக்கடை, கோனியம்மன் கோயில், திருச்சி சாலை, சுங்கம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பயணத்தின்போது அவர் பேசியது:
கடந்த அதிமுக ஆட்சியை இருண்ட ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் இருட்டாகத்தான் தெரியும். அதிமுக ஆட்சி தனது 10 ஆண்டுகளில் கோவைக்கு அதிகப்படியான திட்டங்களைக் கொடுத்திருக்கிறது. அதற்கு பாலங்களே சாட்சி.
மக்கள் விரும்பிய இடங்களில் நாங்கள் பாலம் கட்டினோம், முதல்வர் அவற்றுக்கு திறப்பு விழா செய்கிறார். தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. திட்டங்களை நாங்கள்தான் கொண்டு வர முடியும், திமுகவால் திறப்பு விழா மட்டுமே செய்ய முடியும்.
கலைக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, கால்நடைப் பூங்கா, பொறியியல், பி.எட். கல்லூரி என பல கல்லூரிகளைத் திறந்ததால் உயர் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தற்போது அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுக்க முடியவில்லை. அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களைக் கண்டாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர்.
மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை அபிவிருத்தி செய்வதற்குத்தான். நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளைக் கட்டுவது எந்த விதத்தில் நியாயம், இதை ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறோம்.
கல்விக்கு செலவிட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அரசுப் பணத்தில் இருந்துதான் கல்விக்கு செலவிட வேண்டும். அதேபோல் அருப்புக்கோட்டையில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான 225 ஏக்கர் நிலத்தை எடுத்து சிப்காட்டுக்கு கொடுக்கப் பார்க்கிறது திமுக.
அதைத் தடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தும் திமுக அரசு அதை செயல்படுத்தவில்லை.
அதிமுக அரசு அமைந்த பிறகு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் கோவையில் தொழில் துறை நலிவடைந்துவிட்டது. திமுக ஆட்சியை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அது 'சிம்ப்ளி வேஸ்ட்' என்றார்.