திருவண்ணாமலையில் பார்த்தசாரதிக்காக ஓடிவந்த ஜவாஹிருல்லா.. அரசு பள்ளி ஆசிரியரின் நிலைமை? பரபர கோரிக்கை

திருவண்ணாமலையில் பார்த்தசாரதிக்காக ஓடிவந்த ஜவாஹிருல்லா.. அரசு பள்ளி ஆசிரியரின் நிலைமை? பரபர கோரிக்கை
திருவண்ணாமலையில் பார்த்தசாரதிக்காக ஓடிவந்த ஜவாஹிருல்லா

திருவண்ணாமலை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து, சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் ஆர்ப்பாட்டத்தை நடத்தும்முன்னேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.. தங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்.. இது சம்பந்தமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012லிருந்தே தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்தவகையில், தற்போது 12,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்..

இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். இதற்காக ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. எனவே, தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்வோம் என்று திமுகவும் அன்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததது.. ஆனால், அதனை இதுவரை நிறைவேற்றவில்லை.. எனவே, அந்த கோரிக்கையை வலியுறுத்தி சிறைநிரப்பும் போராட்டத்தை நேற்று முன்தினம் பகுதிநேர ஆசிரியர் சங்கங்கள் நடத்துவதாக அறிவித்தன

உடனே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் திட்டமிட்டப்படி போராட்டத்தை ஆசிரியர்கள் நடத்தியிருந்தனர்.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போலீஸார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

ஆனால், அதையும் மீறி 1000-க்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணா சாலையில் ஒன்றுகூடினர்.. அப்போது அங்கு வந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக போராட்டத்துக்கு வந்த ஆசிரியர்களையும் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுவரை கோரிக்கையை நிறைவேற்றாத வருத்தத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர்

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பார்த்தசாரதி விபத்தில் இறந்துவிட்டார்.. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்.. இது அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை தந்துவருகிறது..

இந்த செய்தியையறிந்த, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது

திருவண்ணாமலை மாவட்டம் வென்னாங்குபட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் பார்த்தசாரதி, சென்னையில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டத்தில் பங்குபெற்று வீடு திரும்பிய போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை நியாயமானது. திமுக தேர்தல் அறிக்கையிலும் பணி நிரந்தர செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த விபத்து நடந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது..

குடும்பத்தில் அரசு வேலை

வெறும் 12,500 ஊதியத்தில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியர்களின்குடும்ப சூழ்நிலை பரிதாபகரமானது. ஆசிரியர் பார்த்தசாரதியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகைவழங்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்"