பெங்களூருவில் தெருநாய்களுக்கு நாள்தோறும் சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி திட்டம்

பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் இன்று உலக அளவில் பெங்களூரு பிரபலமாக உள்ளது. 1½ கோடி பேர் வசிக்கும் பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. ஒரு காலத்தில் பூங்கா நகரம் என அழைக்கப்பட்ட பெங்களூரு, தற்போது கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.
பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை தாக்கி வருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு 70 வயது மூதாட்டி தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தார். பெங்களூருவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டு மாநகராட்சி கணக்கெடுப்பின்படி, பெங்களூரு மாநகரில் 2 லட்சத்து 79 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வந்து செல்லும் பெங்களூரு மாநகரில் தெருநாய் தொல்லை தீரா தலைவலியாக மாறியுள்ளது.
தெருநாய் தொல்லைக்கு முக்கிய காரணம் அவற்றுக்கு போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது தெருநாய்களுக்கு 'சிக்கன் ரைஸ்', 'எக் ரைஸ்' என விதம் விதமான அசைவ உணவு வழங்குவதுதான் அந்த புதிய யோசனை.
இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்தை செலவிடவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கூறுகையில், தெருநாய்கள் மனிதர்களை கடிக்காமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சைவ உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உதவிக்கரம் நீட்டினர்.
இருப்பினும் இந்த திட்டம் போதிய பலனளிக்கவில்லை. எனவே தற்போது பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் பாக்யா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.79 லட்சம் நாய்களுக்கு சத்தான உணவு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.
இதையெல்லாம் பார்க்கும்போது என்னமா யோசிக்கிறாங்கப்பா என்று நினைக்க தோன்றுகிறது.
இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் மனிதர்களுக்கே ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத நிலையில், தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக்ரைஸ் கொடுப்பதா என பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு ருசியான உணவு கொடுத்தால் தெருநாய்களின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு ஆகும்