SBI-இல் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியமா? தவறினால் எவ்வளவு அபராதம்? இந்த ரூல்ஸ் பற்றி தெரியுமா?

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கில் பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகின்றன. ஆனால், இந்த சலுகைகளை பெற வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் சில விதிமுறைகள் பின்பற்றுவது அவசியம் ஆகும். அந்த வகையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது என்பது முதன்மையானதாக உள்ளது. வங்கிகளை பொறுத்து இருப்புத் தொகை பராமரிப்பை கடைபிடித்து வருகின்றன.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சாதாரண சேமிப்பு கணக்குகளில் (Regular Savings Account) குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளது. முன்னதாக, குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால், வங்கிகள் அபராதம் விதித்து வந்தன. ஆனால், இப்போது அந்த விதிமுறைகள் கிடையாது. மேலும், இந்த விதி மார்ச் 2020ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி விதிப்படி, "வங்கியில் வாடிக்கையாளர்கள் புதிய கணக்கு திறக்கும் போது, அவர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றிய முழுமையான விவரங்களை வழங்க வேண்டும். மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையில் ஏதேனும் மாற்றம் வந்தால், அதை வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரப்பினர் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் குறைந்தபட்ச தொகையை ஒரு நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், வங்கி ஒரு மாதம் வரை காத்திருக்கும். அதற்கு பிறகு தான் அபராதம் விதிக்கும். அதேபோல் பிரதமரின் ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்குகளைத் திறக்கும் போது, குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றும் இந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, PMJDY கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றி கவலைப்படாமல் கணக்கை பயன்படுத்தலாம் என்பது தெரிகிறது..
அதேபோல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு தங்கள் வாரியம் அங்கீகாரம் அளித்த கொள்கைப்படி சேவை கட்டணங்களை நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் தெளிவாகவும், வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்புத் தொகை ஏன் அவசியம்: வங்கிகள் தங்களது சேவைகளை வழங்கும்போது, அதன் செலவுகளை ஈடுகட்டுவதற்கும், கணக்குகளை செயலில் வைத்திருக்கவும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சத் தொகையை பராமரிக்க வேண்டும். இது வங்கி கொள்கைகளின் ஒரு பகுதியாகும். இந்த தொகையை பொறுத்தவரை வங்கிகளுக்கு வங்கியும், நகரம், கிராமப்புறம் மற்றும் கணக்கு வகை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். சேமிப்பு கணக்குகளுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை இருப்புத் தொகையை பராமரிப்பது கட்டாயமாக இருக்கலாம். நடப்பு கணக்குகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை இருக்க வாய்ப்பு உள்ளது.
உதாரணத்திற்கு, வாடிக்கையாளர் ஒருவர், தனது சேமிப்பு கணக்கில் மாதம் முழுவதும் ரூ.3,000 வைத்திருக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகம் நிபந்தனை விதித்திருந்தால், அந்த தொகையை விட குறைவாக உங்கள் கணக்கில் இருக்கும்பட்சத்தில் ரூ.50 முதல் ரூ.500 வரை மாதம் ஒரு முறை சேவை கட்டணம் விதிக்கப்படலாம். எனவே, வாடிக்கையாளர்கள் வங்கியின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு தங்களது கணக்கை பராமரிக்க வேண்டும். இது தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க உதவும்.