எந்த அளவு மது அருந்தலாம்? மதுப் புட்டியில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி..

எந்த அளவு மது அருந்தலாம்? மதுப் புட்டியில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி..
எந்த அளவுக்கு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிலில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது...

மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மதுப் புட்டிகளில் குறிப்பிடுவதைப் போல, எந்த அளவு மது அருந்தலாம் என்பதையும் குறிப்பிட உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டா் ஏ.ஸ்ரீதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டுவர சாத்தியக்கூறுகள் உள்ளனதா என்பதை ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மதுப்புட்டிகளில் எந்த அளவுக்கு குடிக்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும். மதுவினால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், குழந்தையின்மை, இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்...

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில், இதுகுறித்து மனுதாரா் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மது அருந்துவது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மது புட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுபுட்டிகளில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அளவு மது குடிக்கலாம் என மதுப்புட்டியில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்....