24 வயதில் ரூ.1.22 கோடி மதிப்புள்ள Apartment-ஐ வாங்கிய ஐடி இளைஞர்.. எப்படி சாத்தியமானது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணியாற்றும் 24 வயது ஐ.டி. துறை தொழில்நுட்ப நிபுணர், ரூ.1.22 கோடி மதிப்புள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இளம் வயதில் இவ்வளவு பெரிய முதலீடு செய்திருப்பதை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும், சிலர் கேள்விகளையும் எழுப்பினர். இவர், இவ்வளவு பெரிய தொகையை எப்படி திரட்டினார்..? எவ்வளவு சேமிப்பு, வருமானம், அல்லது கடன் உதவியுடன் இந்த முதலீட்டை செய்திருப்பார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்
இதுதொடர்பாக ரெடிட் தளத்தில் அந்த இளைஞர் வெளியிட்டுள்ள பதிவில், "24 வயதில் இந்த உயர்ந்த மதிப்புள்ள வீட்டைக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். இது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், திட்டமிட்டு சேமித்ததாலும், சரியான நேரத்தில் முடிவெடுத்ததாலும் இது இப்போது சாத்தியமாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், "இப்போது வீட்டுக் கடன் செலுத்த தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. 35% பணத்தை நேரடியாக செலுத்திவிட்டேன். 65% வீட்டு கடனாக வாங்கினேன். ஆரம்ப கட்ட செலவுக்கு பெற்றோர் கொஞ்சம் எனக்கு உதவி செய்தனர். ஆனால், மீதமான பணத்தை மாதம் தவணையாக நானே செலுத்தி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் பதிவு இளம் வயதில் சொந்த வீடு வாங்கியவர் எப்படி தனது பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி, சுயமாக தன்னுடைய கடனை நிர்வகிக்கிறார் என்பதை காட்டுகிறது
இந்நிலையில் பயனர் ஒருவர், "இந்த வெற்றியை அடைய நீங்கள் என்ன செய்தீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த இளைஞர், மிகவும் நேர்மையாக பதில் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், "எனது முதலீட்டு பயணம் முதன்முதலில் என் அப்பாவுடன் இளவயதிலேயே துவங்கியது. ஆரம்பத்தில் எங்களுக்குத் தெளிவான அனுபவம் கிடையாது. ஆனாலும், இப்போது நன்றாக சென்று கொண்டிருக்கிறது. முதலீட்டில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். எனவே, என்னால் ஒரு நல்ல நிதி நிலைமையை உருவாக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பயனர், "ஹோம் டூர் கொடுக்க முடியுமா"..? என்று கேட்டார். இந்த கேள்வியை அவர் தவிர்க்காமல், தனது அபார்ட்மெண்டின் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவரது வீட்டின் அமைப்பு, தேர்வுகள் மற்றும் சுகாதாரமான சூழல் அனைத்தும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன
மேலும் ஒரு பயனர், "வாழ்த்துகள் தம்பி! வீட்டைப் பார்த்தால் ரொம்ப அழகா இருக்கு. பெங்களூரில் 24 வயதில் வீடு வாங்கியிருக்கீங்க. இது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், அவரது வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் நிதி வழிகள் பற்றி ஆர்வத்துடன் பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், மற்றொரு பயனர், "உங்கள் வருமானம் எவ்வளவு..? Side Income-க்கு வேறு ஏதேனும் செய்கிறீர்களா..?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கும் பதிலளித்த அந்த இளைஞர், "நான் வருமானம் பெற மூன்று முக்கியமான வழிகள் உள்ளன. முதலில், டிரேடிங். அதாவது, பங்கு சந்தை மற்றும் மற்ற நிதி சந்தைகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் சில லாபங்களைப் பெற்றுக் கொள்கிறேன்.
இரண்டாவது, என்னுடைய பெயரில் சில உடைமைகள் இருக்கின்றன. (உதாரணமாக நிலம் அல்லது வாடகைக்கு விடப்பட்ட இடங்கள்) இவற்றால் எனக்கு மாதந்தோறும் ஒரு தொகை கிடைக்கிறது. மூன்றாவது, இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் சார்ந்த பணிகளில் ஃப்ரீலான்ஸ் வேலை செய்து வருகிறேன். இதற்குள் சமூக ஊடக பிரமுகர்களுக்கான விளம்பர உத்திகள், பிராண்ட் புரமோஷன் திட்டங்கள் ஆகியவை அடங்கும்" என்று விளக்கம் அளித்துள்ளார்
ரெடிட் தளத்தில் நடைபெற்ற உரையாடல், வீடு வாங்கிய இளைஞரின் வெற்றியால் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், வேலை முயற்சியில் உற்சாகமும் கொடுத்துள்ளது. வீடு வாங்கிய அதிர்ஷ்டம் போல, இளம் வயதில் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் இந்த பதிவு மூலம் கிடைத்துள்ளது.