சென்னை இலவச லேப்டாப் திட்டம்.. 3 நிறுவனங்கள் விண்ணப்பம்.. 45 நாட்களில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை!

சென்னை இலவச லேப்டாப் திட்டம்.. 3 நிறுவனங்கள் விண்ணப்பம்.. 45 நாட்களில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை!
45 நாட்களில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப் கொடுக்கும் திட்டத்திற்கான டெண்டரில் 3 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் ஏசர், டெல் மற்றும் ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன. இந்த 3 நிறுவனங்களிடம் இருந்தும் விலை தொடர்பான ஒப்பந்தப் புள்ளி பெறப்பட்டு, அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது

தமிழக அரசின் பட்ஜெட்டில் நடப்பாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு தரப்பில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ஒரு லேப்டாப்பின் மதிப்பு ரூ.20 ஆயிரமாக இருக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கூறி இருந்தார்

20 லட்சம் லேப்டாப்

இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால் 2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு நிதி பிரச்சனை காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின், தற்போது விலையில்லா லேப்டாப் வழங்க முடிவு எடுக்கப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது

நிறுவனங்கள் விண்ணப்பம்

இதனைத் தொடர்ந்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் வெளியிட்டது. இந்த டெண்டர் திறக்கப்பட்டுள்ள நிலையில், 20 லட்சம் லேப்டாப் தயாரித்து வழங்குதற்காக 3 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. சர்வதேச நிறுவனங்களான டெல், ஏசர் மற்றும் ஹெச்பி ஆகிய 3 நிறுவனங்களும் விண்ணப்பித்திருக்கின்றன.

அடுத்தது என்ன?

இதன் காரணமாக 3 நிறுவனங்கள் அளித்துள்ள ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்படும். இதன்பின் எந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறதோ, அந்த நிறுவனத்திடம் இருந்து விலை தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படும். தொடர்ந்து ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின், அதற்கான ஆணைகளை தமிழக அரசு அந்த நிறுவனத்திற்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

.

45 நாட்களில் நடவடிக்கை

அதேபோல் அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் நிறுவனங்களுக்கு வழங்கத் தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இம்முறை லேப்டாப் டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள், சர்வீஸ் செய்வதற்கான கிளையைத் திறக்கவும் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சர்வீஸ் சென்டர்

ஏனென்றால் கடந்த முறை இலவச லேப்டாப் அளிக்கப்பட்ட போது, அதனை சர்வீஸ் செய்வதற்குத் தனியார் நிறுவனங்களையே மாணவர்கள் நாட வேண்டியதாக இருந்தது. இந்த சிக்கலை களையும் வகையில் தமிழக அரசு லேப்டாப் நிறுவனங்கள் தங்களின் சர்வீஸ் சென்டர்களை திறக்கவும் அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.