விவசாயிகள் அக்கவுண்டில் வரும் 2000 ரூபாய்.. பிஎம் கிசான் 20ஆவது தவணை ரெடி!

விவசாயிகள் அக்கவுண்டில் வரும் 2000 ரூபாய்.. பிஎம் கிசான் 20ஆவது தவணை ரெடி!
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நாளை முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் தவணை

மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் 20ஆவது தவணை கிடைக்கவிருக்கிறது. இந்தத் தவணைத் தொகை 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி முதல் இந்தத் தவணை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கைஅதிகமாக உள்ளது. அவர்களின் வருமானம் குறைவாக இருப்பதால் பிஎம் கிசான் சம்மான் நிதி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் விவசாயிகளின் நிதிப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவியாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் பிஎம் கிசான் சம்மான் நிதியின் 20ஆவது தவணை ஜூலை 18ஆம் தேதி முதல் அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன. 2025-26 நிதியாண்டில் 2.5 லட்சம் புதிய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகளுக்கு கடன் அட்டை வழங்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் பயிர் கடன்களைப் பெறலாம். விவசாயிகள் விவசாயத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படுவார்கள். இதன் மூலம் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களை விவசாயிகள் பெற முடியும்

நீங்களும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்திருந்தால் அடுத்த தவணை 2,000 ரூபாயை சரியான நேரத்தில் பெற விரும்பினால் உங்கள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா, திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பெயர், மொபைல் எண் மற்றும் கணக்கு எண்ணில் எந்தப் பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேண்டும். அதற்கு pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது உங்கள் அருகிலுள்ள பொது ச்சேவை மையத்தைப் பார்வையிடுவதன் மூலமோ இந்த விவரங்களைச் சரிபார்த்து அப்டேட் செய்து கொள்ளலாம்

நாட்டிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே மத்திய மோடி அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் தகுதியில்லாத பலர் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெறுகின்றனர். அதைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாகவே கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியது. சரியான பயனாளிகளுக்கு மட்டுமே பிஎம் கிசான் நிதியுதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மோசடிகளைத் தடுக்கவும்தான் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டது.

20ஆம் தவணைப் பணம் நாளை முதல் கணக்கில் வரவிருக்கும் நிலையில் விவசாயிகள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா இல்லையா என்று சரிபார்க்கலாம்