மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையில் விரைவில் சதம் அடிக்கும் பாஜக: பெரும்பான்மையை தாண்டியது என்டிஏ கூட்டணி

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையில் பாஜக சதம் அடிக்க உள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) பெரும்பான்மையை விட அதிகமாக 133 எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தம் 245 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் 240 எம்.பி.க்கள் உள்ளனர்.
இதில் என்டிஏவுக்கு 133 எம்.பி.க்கள் உள்ளனர். இது பெரும்பான்மை 121-ஐ விட 12 அதிகம் ஆகும். இதில் பாஜகவுக்கு மொத்தம் 99 எம்.பி.க்கள் உள்ளனர். அடுத்து வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு சதம் அடிப்பதற்கு தேவையான ஓர் எம்.பி. கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மக்களவையில் என்டிஏவுக்கு ஏற்கெனவே பெரும்பான்மை இருப்பதால் பாஜகவால் முக்கிய மசோதாக்களை இரு அவைகளிலும் தங்குதடையின்றி நிறைவேற்ற முடியும். மாநிலங்களவையில் என்டிஏவை அடுத்து எதிர்க் கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு தற்போது 107 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 27 இடங்களுடன் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. என்றாலும் இது, பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை.
என்டிஏ உறுப்பினர்களில் அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 4 எம்.பி.க் கள் உள்ளனர். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் 3, தெலுங்கு தேசம் 2 மற்றும் நியமன உறுப்பினர்கள் 10 பேர் உள்ளனர்.
காங்கிரஸை தொடர்ந்து 13: எம்.பி.க்களுடன் திரிணமூல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் 10 எம்.பி.க்களுடன் திமுக மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 5, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) 3, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சமாஜ்வாதி தலா 4, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3, சிவசேனா (யுபிடி), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலா 2, கேரள காங்கிரஸ் (எம்) 1, சுயேச்சை 1 என்ற எண்ணிக்கையில் எம்.பி.க்கள் உள்ளனர்.
என்டிஏ, இண்டியா ஆகிய இரு கூட்டணியிலும் இடம்பெறாத பிற கட்சிகளுக்கு 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆம் ஆத்மிக்கு 9 எம்.பி.க்கள் உள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு தலா 7, பிஆர்எஸ் 4, பிஎஸ்பி மற்றும் எம்என்எப் தலா 1 என எம்.பி.க்கள் உள்ளனர்.