ஒலியைவிட 8 மடங்கு வேகம் சென்று தாக்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ஒலியைவிட 8 மடங்கு வேகத்தில் சென்று 1,500 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை செய்து வருகிறது. பல கட்ட வெற்றிகர பரிசோதனைக்குப்பின் இந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும்.
இந்நிலையில் இடி-எல்டிஎச்சிஎம் (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்தது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
தற்போது இந்த வகை ஏவுகணை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் மட்டுமே உள்ளன. ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதால், அந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.