வேளச்சேரி டூ கிண்டி வரையிலான புதிய மேம்பாலம்.. சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாநகராட்சி

சென்னை: சென்னை வேளச்சேரியில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி தரப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கிண்டி சர்தார் படேல் சந்திப்புக்கு அருகே முதல் குருநானக் கல்லூரி சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வேளச்சேரி, கிண்டி பகுதியில் உள்ள 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் 3 கிமீ தூரத்திற்கு ரூ. 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி கோரி இருக்கிறது
வேளச்சேரி மேம்பாலம்
சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த மேம்பாலம் ரூ.310 கோடியாக கட்டப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ரூ.231 கோடிக்கு மட்டுமே டெண்டர் கோரி இருக்கிறது. இதனால் சென்னை மாநகராட்சி உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.கிண்டி சர்தார் படேல் சந்திப்புக்கு அருகே முதல் குருநானக் கல்லூரி சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. 3 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த மேம்பாலம் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. கிண்டி மார்க்கத்தில் 2 வழிகளும், வேளச்சேரி மார்க்கத்தில் 2 வழிகளும் இருக்கும். இந்த மேம்பால சாலையின் அகலம் 12 மீட்டர் இருக்கும்.
போக்குவரத்து நெரிசல்
அதேபோல் மேம்பாலத்தின் முழு நீள வடிவமைப்பு T வடிவில் இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1,100 சதுர மீட்டர் இடத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. வேளச்சேரி 100 அடி சாலையில் இருந்து வாகனங்கள் ஃபீனிக்ஸ் மால் திரும்பும் போது, அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைக்க புதிய மேம்பாலம் உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது
சென்னையில் சாலை உட்கட்டமைப்பில் வேளச்சேரி பிரதான சாலை - குருநானக் கல்லூரி இடையிலான மேம்பாலம் புதிய மைல்கல்லாக இருக்கும். இதன் மூலமாக கிண்டி - வேளச்சேரி இடையில் சீரான போக்குவரத்து இருக்கும். இந்த மேம்பாலப் பணிகள் முடிவடைய 2 ஆண்டுகள் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கட்டுமான பணிகள்
டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு, நிலம் கையப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிவடைய வேண்டும். இதன்பின்னரே கட்டுமான பணிகள் தொடங்கும். கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு எந்த இழுபறியும் இல்லாமல் நடக்க வேண்டும். இதனால் 2027 வரை இந்த மேம்பாலப் பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.