சுபான்ஷு சுக்லாவின் ட்ரீட்.. அல்வா ருசித்த விண்வெளி வீரர்கள்.. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பார்ட்டி

நியூயார்க்: பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நம் நாட்டின் விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா சென்றுள்ளார். இவர் அங்கு ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் வரும் 14ம் தேதி பூமி திரும்புகிறார். இந்நிலையில் தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ சார்பில் சுபான்ஷு சுக்லாவிடம் கொடுத்து அனுப்பப்பட்ட ‛கஜர் கா அல்வா'வை பார்ட்டி நடந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து சுபான்ஷு சுக்லா அந்த அல்வாவை பகிர்ந்து சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
நம் பூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) சுற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியது.
பூமிக்கு மேலே 400 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு 90 நிமிடங்கள் என ஒருநாளைக்கு 16 முறை சுற்றுகிறது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்
இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர், வீராங்கனைகள் ஆய்வுகள் செய்து வருகின்றனர். அவ்வப்போது பிற நாடுகளின் வீரர்களும் சென்று வருகின்றனர். அந்த வகையில் நம் நாட்டின் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து Ax-4 மிஷனில் அவர் விண்வெளிக்குப் புறப்பட்டார். சுபான்ஷூ சுக்லா உள்பட 4 பேருடன் கடந்த 26ம் தேதி அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்தார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் 2 வாரம் வரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சுபன்ஷு சுக்லா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளனர். வரும் 14ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர்கள் பூமிக்கு புறப்பட உள்ளனர்.
இதற்கிடையே தான் சுபான்ஷு சுக்லா தன்னுடன் உள்ள விண்வெளி வீரர்கள் ட்ரீட் வைத்துள்ளார். இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ விண்வெளிக்கு ஏற்றது போல் ‛கஜர் கா'அல்வாவை சுகன்ஷு சுக்லாவிடம் வழங்கியிருந்தது. இந்நிலையில் தான் சுபான்ஷு சுக்லா தான் கொண்டு சென்ற ‛கஜர் கா' அல்வாவை சக விண்வெளி வீரர், வீராங்கணைகளுடன் பகிர்ந்து பார்ட்டி கொடுத்தார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விருந்து மாளிகையில் இந்த பார்ட்டி நடந்தது. மேலும் இந்த பார்ட்டியில் இறால் காக்டெய்ல்கள், சிக்கன் ஃபாஜிடாக்கள், இனிப்பு ரொட்டி, பால், வால்நட் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட கேக்கும் இடம்பெற்றிருந்தது. இந்த கேக்கின் மேல்பகுதியில் ‛கஜர் கா'.
அனைத்து விண்வெளி வீரர், வீராங்கணைகளும் ‛கஜர் கா' அல்வாவை ரசித்து சாப்பிட்டனர். கஜர் கா அல்வா என்பது நம் நாட்டில் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் பயன்படுத்தி இந்த அல்வா சமைக்கப்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்த இந்த பார்ட்டி தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது
இதுதொடர்பாக விண்வெளி வீரர் ஜானி கிம் கூறுகையில், ‛‛இந்தப் பயணத்தில் நான் அனுபவித்த மிகவும் மறக்க முடியாத மாலை நேரத்தில் இதுவும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய நண்பர்களான ஆக்ஸ்-4 உடன் உணவை பகிர்ந்து கொண்டேன். இந்த வேளையில் சுவாரசியமான கதைகளை பகிர்ந்து கொண்டோர். பல்வேறு நாடுகளின் வீரர்களான நாங்கள் தங்களின் சொந்த நாட்டு மக்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதை நினைத்து வியந்தோம்'' என்றார்