டோல் கேட் கட்டணம் இவ்வளவு குறைகிறதா? ஹைவேஸில் மத்திய அரசு தரும் மாற்றம்? மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்

சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணச் சலுகை வழங்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.. குறுகிய சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது, கார்களுக்கு வருட பாஸ் சுமார் 3,000 ரூபாய்க்கு கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், சுங்கக் கட்டணம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அடுத்த 2 வருடங்களில் 25,000 கி.மீ இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, அறிவித்திருக்கிறார்..
1.46 லட்சம் கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 80,000 கி.மீ நீளம் இந்த வகையில் வருவதால், அடுத்த 10 வருடங்களில், இருவழிச் சாலைகளை விரிவுபடுத்தப்போவதாகவும் தெரிகிறது.
அதேபோல, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வருகிறது என்பதால், பயணிகளுக்கு நிவாரணம் தரும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் 2 திட்டங்களை சமீபத்தில் முன்வைத்திருந்தது.
2 திட்டங்கள் வருகிறது
2 அல்லது இரண்டரை வழித்தடங்கள் கொண்ட குறுகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், கார்களுக்கு வருடத்துக்கு சுமார் ரூ.3,000 கட்டணமாக செலுத்தி வரம்பற்ற பயணத்திற்கான அனுமதிச் சீட்டு வழங்குவதும் என்ற இருவிதமான திட்டங்கள் குறித்த தகவல் வெளியாகியிருந்தது
இந்த திட்டங்களுக்கு சாலைப் போக்குவரத்து அமைச்சகமும் ஒப்புதல் அளித்து, நிதி அமைச்சகத்தின் செலவினத் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.. மேற்கண்ட இரு திட்டங்களும் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு பலனை தரும் என்றாலும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.. வருட பாஸ்களால் சுங்கச்சாவடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், குறுகிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவதால் எந்த பாதிப்பும் இருக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
மீண்டும் குட்நியூஸ்
இப்படிப்பட்ட சூழலில், சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக மற்றொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது..
அதாவது, 10 மீட்டர் அகலம் கொண்ட, இருவழி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி நெடுஞ்சாலையாக விரிவுபடுத்த உள்ள நிலையில், சுங்கக் கட்டணத்தை பாதியாக குறைக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.. அந்தவகையில் எப்படியும் 50 சதவீதம் தள்ளுபடி இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் கட்டுமானப் பணிகளின்போது, பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாலும், கட்டுமானத்தின்போது சாலைகளின் அகலம் குறைவதால் சிறந்த சேவை கிடைக்காததாலும், இப்படியொரு கட்டண சலுகை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.... தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த கோரிக்கைக்கு அங்கீகாரம் எப்போது கிடைககும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹைவேஸ் கட்டணம்
ஒருவேளை இதற்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டால், ஹைவேஸில் சாதாரண சுங்கக் கட்டணத்தைவிட 30 சதவீதம் வரை குறைவாக சுங்கக் கட்டணத்தை செலுத்த வாய்ப்புள்ளது.. அதேபோல, 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக அகலப்படுத்தும்போது அல்லது 6 வழிச்சாலைகளை 8 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தும்போது, வழக்கமான கட்டண விகிதத்தில் 75 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நெடுஞ்சாலைகளில் பாலங்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இருந்தால், சுங்கக் கட்டணங்களை 50 சதவீதம் வரை குறைக்கக்கூடியை விதிமுறைகள் சமீபத்தில் அமலாக்கப்பட்ட நிலையில், மீண்டும் டோல் கட்டணம் பாதியாக குறைய போவதாக தகவல் வெளியாகியிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.