தமிழ்நாட்டிலேயே முதல்முறை.. முழுக்க முழுக்க டெக்னாலஜி! தாம்பரம் திண்டிவனம் சாலை அடியோடு மாறுது!

சென்னை: தேசிய நெடுஞ்சாலை 32 (NH-32) இன் தாம்பரம்-திண்டிவனம் பகுதி, தமிழகத்தின் முதல் IoT (Internet of Things) ஒருங்கிணைந்த நெடுஞ்சாலையாக மாற உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முன்னெடுக்கும் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த 100 கி.மீ தூர நடைபாதையில் GPS இணைப்புடைய சென்சார்கள் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள் இருக்கும். இது தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை தடுக்கவும் உதவும். ஸ்மார்ட் உள்கட்டமைப்பை நோக்கி ஒரு முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
Internet of Things அதாவது இணையம் சார்ந்த விஷயங்கள் (IoT) என்பது சென்சார்கள், மென்பொருள் மற்றும் பிற இணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்குவது ஆகும். பல துறைகளில் நாம் தினம் தினம் இணையத்தை, மென்பொருட்களை பயன்படுத்துகிறோம். உதாரணமாக முன்பு மார்க்கெட்டில் காசு கொடுத்து வாங்கினோம். இப்போது ஆன்லைன் மூலம் பணம் தந்து வாங்குகிறோம்
இதுவும் அந்த வகையில் சேர்ந்ததுதான். நெடுஞ்சாலைகளில் இதை அறிமுகம் செய்வதன் மூலம் நெடுஞ்சாலையில் எங்கே விபத்து நடக்கிறது, எங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எங்கே பள்ளங்கள் உள்ளன என்பது போன்ற விஷயங்களை கண்காணிக்க முடியும். விதிமுறை மீறல்களை கண்காணிக்க முடியும். அதோடு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
தாம்பரம்-திண்டிவனம் நடைபாதைக்கு, ஒவ்வொரு தெரு விளக்கும் GPS மூலம் இயக்கப்பட்ட IoT சென்சார்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். இது மின்சார பயன்பாட்டை தொலைவிலிருந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும். குறைந்த போக்குவரத்து உள்ள பகுதிகளில் விளக்குகளை தானாகவே மங்கச் செய்யவோ அல்லது அணைக்கவோ இந்த அமைப்புக்கு முடியும். இதனால் மின்சார நுகர்வு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் குறையும். கூடுதலாக, சென்சார்கள் செயலிழப்புகள் அல்லது தோல்விகளைக் கண்டறிந்து சரியான நேரத்தில் பராமரிப்பு செய்ய முடியும்.
விளக்குகளைத் தாண்டி, இந்த ஸ்மார்ட் அமைப்பு அவசர ஊர்திகள், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவுகள் மற்றும் கிரேன்கள் போன்ற முக்கியமான அவசர சேவைகளையும் கண்காணிக்க உதவும். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் அல்லது அதிக போக்குவரத்து நேரங்களில் ரோந்துப் பிரிவுகளைச் சரியான இடங்களில் பயன்படுத்துவதற்கும் உதவும்.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை டிஜிட்டல் மயமாக்கி சாலையில் செல்லும் மக்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வர உள்ளனர். இதுபோன்ற ஸ்மார்ட் உள்கட்டமைப்பு ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் சோதிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து NHAI செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், நாங்கள் ஸ்மார்ட் விளக்குகளை மட்டும் நிறுவவில்லை - உயிர்களைக் காப்பாற்றவும், வளங்களைப் பாதுகாக்கவும், பயணத்தை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.. நெடுஞ்சாலைகளில் இதை அறிமுகம் செய்வதன் மூலம் நெடுஞ்சாலையில் எங்கே விபத்து நடக்கிறது, எங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எங்கே பள்ளங்கள் உள்ளன என்பது போன்ற விஷயங்களை கண்காணிக்க முடியும். விதிமுறை மீறல்களை கண்காணிக்க முடியும். அதோடு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்" என்றார்.