Chennai to Vellore RRTS: சென்னை To வேலூர் RRTS ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையிலிருந்து வேலூருக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் தமிழ்நாடு
தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கிய வளர்ந்த மாநிலங்களில், ஒன்றாக இருந்து வருகிறது. பொருளாதார ரீதியிலும் தொடர்ந்து தமிழகம் வளர்ந்து வருவதால், முக்கிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன
.சென்னை, திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலை வாய்ப்புகளை தேடி தினமும் பல லட்சக்கணக்கான மக்கள், பொதுப் போக்குவரத்து மூலம் படையெடுத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், நீண்ட நேர காத்திருப்பு மற்றும் பயண நேரமும் அதிகரிப்பது பல்வேறு வகையில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ( ஆர்.ஆர்.டி.எஸ்)- Regional Rapid Transit System (RRTS)
தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி. விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, புதுடெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு உருவாக்கப்படும் என தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தது
.சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் மண்டல போக்குவரத்து ரயில் ( Chennai - Kanchipuram -Vellore RRTS Train )
சென்னைக்கு அருகே மிக முக்கிய நகரமாக வேலூர் இருந்து வருகிறது. அதேபோன்று வேலூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, நாள்தோறும் பல ஆயிரம் கணக்கானோர் சென்னைக்கு படையெடுக்கின்றனர்.
சாலை மார்க்கமாக, வேலூரில் இருந்து சென்னை வரவேண்டும் என்றால் 3 மணி நேரத்தில் 4 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடுகிறது. எனவே, சென்னை மற்றும் வேலூர் இடையே மண்டல போக்குவரத்தை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேலூருக்கு, ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் தயாரிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி டெண்டர் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை மூன்றாம் தேதி "பாலாஜி ரயில் ரோடு" என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது
160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்
இந்த ரயில் அமைப்பு சராசரியாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், அப்படி என்றால் சென்னை - காஞ்சிபுரம் இடையே தூரத்தை, 20 நிமிடத்தில் அடைய முடியும். வேலூர் நகரத்திற்கு 1 மணி நேரத்திற்குள் செல்ல முடியும். இந்த ரயில் போக்குவரத்து செயல்பாட்டிற்கு வந்தால், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமையும்.
RRTS சிறப்பம்சங்கள் என்னென்ன?
மெட்ரோ ரயில்களை விட 3 மடங்கு வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்து அமைப்பாக இந்த அமைப்பு இருக்கும். 180 கிலோமீட்டர் வேகத்திற்கு ரயில்களை இயக்கும் வகையில், அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் ரயில்கள் மணிக்கு சராசரியாக 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.
எந்தெந்த இடங்களில் போக்குவரத்து வேகமாக நடைபெறுகிறதோ, அந்த இடங்களில் பொருளாதாரம் வேகமாக வளரும். அந்த வகையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளதால், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்.
இந்த போக்குவரத்து அமைப்பு மூலம் பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ஆகியவை இணைக்கப்படும் என்பதால் பயணிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும்.
இந்த வகை ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரயில்களாகவும் இருக்கும்