மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரிப்பு - அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

ஹைதராபாத்: இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐஐடி ஹைதராபாத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய ரயில்வே, தகவல் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வைஷ்ணவ், இந்தியாவில் மின்னணு பொருட்களின் உற்பத்தியும் ஏற்றுமதியும் மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்தியாவுக்கு இணையான நாடுகள் கண்டிராத வளர்ச்சி இது.
வணிக அளவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் குறைக்கடத்தி சிப் (semiconductor chip) இந்த ஆண்டு வெளிவரத் தொடங்கிவிடும். குறைக்கடத்தி சிப் தயாரிப்புக்கான அடிப்படை உபகரணங்களில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரும் ஆண்டுகளில் உலகின் முதல் 5 குறைக்கடத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். அதற்கான பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது.
இந்த வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையே காரணம். அடுத்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியா முழுமையான 4ஜி தொலைத்தொடர்பு தளத்தை வடிவமைக்கும். இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் ஓடத் தொடங்கும் என தெரிவித்தார்.