நிலத்தை தானே உழும் டிராக்டர்!

நிலத்தை தானே உழும் டிராக்டர்!
விவசாய நிலத்தை தானே உழும் டிராக்டர்!

விவசாய நிலத்தை ஓட்டுநர் உதவியின்றி தானே உழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிராக்டர் ஒன்றின் சோதனை பஞ்சாப் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த டிராக்டர் செயற்கைகோள் உதவியுடன் சென்சார் மூலம் தகவல்களைப் பெற்று நிலத்தின் நீள அகலத்தை துல்லியமாக கணக்கிட்டு வெற்றிகரமாக உழுது முடித்து ஆராய்ச்சியாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Global Navigation Satellite System (GNSS) எனப்படும் செயற்கைகோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டரில் தொடுதிரைக் கணினி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வெளிச்சம் குறைந்த நேரத்தில் கூட எந்த தடையுமின்றி நிலத்தை உழும் வகையில் டிராக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஓட்டுநர் மூலமும், மற்ற நேரங்களில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே செயல்படும் வகையில் இரண்டு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது வேளாண் துறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

இதுதவிர, தொலைதூரத்தில் இருந்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இருசக்கர நெல் விதைக்கும் இயந்திரமும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப்பயன்படுத்துவதன் மூலம் விவசாயப் பொருட்களின் உற்பத்திச்செலவு கணிசமாக குறையும் என்றும் கூறப்படுகிறது.

வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, உரிய விலை கிடைப்பதில்லை என்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுடன் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வேளாண் கருவிகள்இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிநவீனமயமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஓட்டுநர் இல்லாத கார்கள், பயணிகள் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் வரிசையில் ஓட்டுநரில்லா டிராக்டர்களும் இணைந்திருப்பது மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக விவசாயத்துறையும் ஈடுகொடுத்து முன்னேறி வருவதையே காட்டுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு பயன்பாடுகளுக்கான செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வானிலை கண்டறிதல், நில அளவை, விவசாய உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கொள்ள உதவி வருகிறது.

இந்த செயற்கைகோள் தொழில் நுட்பத்தை முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்வது அந்தந்த துறையினரின்கடமையாகும். அந்த வகையில் விவசாயத் துறையில் ஓட்டுநரில்லா டிராக்டர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விவசாய வளர்ச்சியில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தொலைதூரத்தில் இருந்து அலைபேசி வழியாக விவசாய நிலங்களின் மோட்டார்களை இயக்குதல், டிரோன் மூலம் மருந்து தெளித்தல் என விவசாயத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக வரும் தொழில் நுட்பங்கள் நம் நாட்டில் இருந்தாலும், உலகெங்கும் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை தமிழக வேளாண் பல்கலைக்கழகங்களும், விவசாயிகளும் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை மென்மேலும் பெருக்க வேண்டும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் விவசாயத்துறை இது போன்றதொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் வளர்ச்சிக்கு இன்னும் மகுடம் சேர்க்க முடியும்.