பிரதமர் பயணம்- இங்கிலாந்துடனான வர்த்தக ஒப்பந்தத்தால் கார், விஸ்கி விலை குறைய வாய்ப்பு...

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்துக்கான இந்திய ஏற்றுமதியில் 99 சதவீத வரிகள் பூஜ்ஜியமாக மாற்றப்படும்.
பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் 4 நாட்களுக்கு இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்..
2 நாள் பயணமாக அவர் முதலில் இன்று இங்கிலாந்து புறப்படுகிறார். பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் பிரதமராக பதவியேற்று அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள். இது ஒரு சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்துக்கான இந்திய ஏற்றுமதியில் 99 சதவீத வரிகள் பூஜ்ஜியமாக மாற்றப்படும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 90 சதவீத பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும்.
இந்தியாவில் இருந்து துணிகள், காலணிகள், ரத்தினக் கற்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவை 4 முதல் 16 சதவீதத்தில் இருந்து வரிகளை முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை இந்தியா தற்போதுள்ள 100 சதவீதத்தில் இருந்து வெறும் 10 சதவீதமாகக் குறைக்கும் என்று கருதினால், ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் டாடாவுக்குச் சொந்தமான ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்களின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து பொருள்களின் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதற்கு ஈடாக, இந்திய கார் தயாரிப்பாளர்கள் மின்சார, ஹைபிரிட் வாகனங்களுக்கான இங்கிலாந்து ஆட்டோ மொபைல் சந்தையை எதிர்நோக்குவார்கள். இதனால், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா எலக்ட்ரிக் போன்ற கார் தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
வெல்ஸ்பன் இந்தியா, அரவிந்த், ரேமண்ட், வர்த்மான் போன்ற இந்திய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் இங்கிலாந்துக்கான ஏற்றுமதிக்கான வரி இல்லாமல் பயனடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்டா இந்தியா மற்றும் ரிலாக்சோ போன்ற காலணி தயாரிப்பாளர்களும் எளிதாக இங்கிலாந்து மார்க்கெட்டை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்ச், விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகக் குறையும். பின்னர் அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீதமாகவும் குறைக்கப்படவுள்ளது.
இங்கிலாந்து பயணம் முடிந்ததும் பிரதமர் மோடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மாலத்தீவுக்கு செல்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். அதிபர் முகமது முய்வை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆதரவு வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.