யோகம் மேல் யோகம் அடிக்குது.. வீட்டு லோன் வைத்திருப்பவர்களுக்கு.. அடுத்த நல்ல செய்தி.. ஆர்பிஐ முடிவு

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்குப் பின் நான்காவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீடு மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகள் தங்களின் ரெப்போ இணைப்பு கடன் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளன. இந்த நடவடிக்கை வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும். அடுத்த முறை மேலும் 25 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சில காலம் பிரேக் எடுத்த பின், மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பேங்க் ஆஃப் பரோடாவின் RLLR 8.15% ஆகவும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR 8.35% ஆகவும் உள்ளது. பெரும்பாலான கடன்கள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வட்டி குறைப்பு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் திருத்தப்பட்ட ரெப்போ இணைப்பு கடன் வட்டி விகிதம் (RLLR) 8.65% லிருந்து 8.15% ஆக குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR 8.85% லிருந்து 8.35% ஆக குறைந்துள்ளது.
அதே நேரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, கடன் வழங்குவதற்கான குறைந்தபட்ச செலவு விகிதத்தில் (MCLR) எந்த மாற்றமும் செய்யவில்லை. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யு.சி.ஓ வங்கி MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட MCLR விகிதம் தற்போது 8.15-9.00% என்ற அளவில் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது