இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ரயில் இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், மேலும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை சிதம்பரம் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயலும்பொழுது கேட் போடாமல் அஜாக்கிரதையாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக அவர் மீது, ரயில்வே தண்டனைச் சட்டம் பிரிவு 105,106,125(a),125,(b), பிஎன்எஸ் 151 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது. விபத்து நடந்தது எப்படி? ரயில்வே கூறுவது என்ன?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் இன்று (ஜூலை 8, 2025) காலை 7.40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த தண்டவாளத்தில் வந்த விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி மாணவர்கள் எடுத்துச் சென்ற புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. பள்ளி வேன் மீது மோதிய ரயில், அந்த வேனை 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. அதில் பயணித்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கவனக் குறைவாக இருந்த கேட் கீப்பர், ரயில்வே கேட்டை மூடாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எஸ்.பி நேரில் ஆய்வு
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி 'ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல' என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல. பள்ளி வாகனத்தில், ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு மாணவர் இறந்துவிட்டார்.
மூன்று குழந்தைகளும், ஓட்டுநரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் மருத்துவமனையில் ஒரு மாணவி உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
அவர் அளித்த தகவலின்படி, நிவாஸ் (வயது 12) என்ற மாணவரும், சாருமதி (வயது 16) என்ற மாணவியும் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
கடலூர் ரயில் விபத்தில் தமது இரு பிள்ளைகள் உயிரிழப்பிற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் என்று உயிரிழந்த சாருமதி, செழியனின் தந்தை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இந்த விபத்தில், சின்னகாட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மகள் சாருமதி (16), பதினொன்றாம் வகுப்பு பயிலும் மகன் செழியன்(15) மற்றும் மாணவர் விமலேஷ்(10) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்தபோது, திராவிடமணி - கலைச்செல்வி தம்பதியின் மகள் சாருமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களது மகன் செழியன் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தனது பிள்ளைகளின் உயிரிழப்புக்கு ரயில்வே நிர்வாகமே முழு காரணம் என்றும், கேட் கீப்பரின் அஜாக்கிரதையால்தான் விபத்து நடந்ததாகவும், இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த திராவிட மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
திராவிட மணியின் உறவினரான ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயில்வே துறையின் அஜாக்கிரதையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு ரயில்வே நிர்வாகம்தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளை இழந்துள்ளார்கள். நினைக்கும்போது மனம் கனக்கிறது. இனி வரும் காலங்களில் இப்படியொன்று நடக்கக்கூடாது. அதற்காகவேனும் அரசு நேர்மையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
"இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், "ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதால்தான் கேட்டை ரயில்வே கேட் கீப்பர் திறந்துள்ளார்" என்ற தகவலையும் ரயில்வே துறை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வேன் ஓட்டுநரின் வாக்குமூலங்களில், "ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது," என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்தத் துயர்மிகு வேளையில், அந்தக் குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் விரைவில் நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த நாட்டில் 68,584 கி.மீ தூரமுள்ள ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டி விட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை," எனக் குற்றம் சாட்டியுள்ளார்.