மவுலானா சஜித் ரஷிதி பேச்சுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் குறித்து, அகில இந்திய இமாம்கள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா சஜித் ரஷிதியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள் மவுலானா சஜித் ரஷிதியின் பேச்சுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், ஆண் எம்பிக்களும் ஏராளமான பெண் எம்பிக்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவை எம்பி தர்மஷிலா குப்தா, “இது டிம்பிள் யாதவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம். சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அமைதியாக இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அகிலேஷ் யாதவின் மனைவி அவமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரே அமைதியாக இருக்கிறார். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நீங்கள் நிற்க முடியாவிட்டால், நீங்கள் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். மவுலானா அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பாஜக எம்பி பன்சுரி ஸ்வராஜ், “மவுலானா சஜித் ரஷிதியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? டிம்பிள் யாதவின் சொந்த கட்சியே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? டிம்பிள் யாதவின் கணவர் (அகிலேஷ் யாதவ்) ஏன் இந்த கருத்துக்கு எதிராக பேசாமல் இருக்கிறார்? ஒரு பெண் எம்பியின் கண்ணியத்தைவிட திருப்திப்படுத்தும் அரசியல் முக்கியமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
மற்றொரு பாஜக பெண் எம்பி மேதா குல்கர்னி, "யாருடைய மனைவி குறித்து கருத்துக் கூறப்பட்டதோ அவரே (அகிலேஷ் யாதவ்) அமைதியாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. திருப்திப்படுத்தும் அரசியலின் வரம்புகள் மீறப்பட்டுள்ளன. மவுலானாவின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன" என தெரிவித்துள்ளார்.
வகுப்புவாதத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணின் கண்ணியம் குறிவைக்கப்பட்ட விதத்துக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்புகிறோம். கட்சிக்கு ஏதேனும் சித்தாந்தம் இருக்கலாம், ஆனால் பெண்களின் கண்ணியம் என்று வரும்போது அனைவரும் அதற்காக ஒன்று சேர வேண்டும். மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், அகிலேஷ் யாதவ் தனது அரசியலுக்காக தனது மனைவிக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. டிம்பிள் யாதவுக்கு எதிராக சஜித் ரஷிதி பேசிய விதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சமாஜ்வாதி கட்சி திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது" என லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)யின் எம்பி ஷாம்பவி சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மவுலானா சஜித் ரஷிதி பேசியது என்ன?: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றம் அருகேயுள்ள மசூதியில் கடந்த 24ம் தேதி கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் உட்பட சமாஜ்வாதி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். டிம்பிள் யாதவ் முக்காடு போடாமல் சாதாரணமாக சேலை கட்டி அமர்ந்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையானது. இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அகில இந்திய இமாம்கள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா சஜித் ரஷிதி, “அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பாருங்கள். சங்கடமாக உள்ளது. அவருடைய (டிம்பிள் யாதவ்) முதுகைப் பாருங்கள். அது நிர்வாணமாக இருக்கிறது.” என தெரிவித்திருந்தார்.