காதலர் தினம்

Valentine's Day

காதலர் தினம்

காதலர் தினம் என்றதும் இன்று பலருக்குப் பலவித ஒவ்வாமைகள் உண்டாகின்றன. நம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுங்கள், அதுவே ஒவ்வாமைக்கு மருந்து. சங்ககால சமுதாயத்தில் காதல் திருமணமே முறையாகும். இதற்கு, சங்க இலக்கியமான அகநானூற்றில் இடம்பெற்ற ‘காதல்’, ‘கற்பு’ ஆகிய அத்தியாயங்களை ஒரு சான்றாகக் கூறலாம்.

சாதிப் பிரிவுகள் இல்லாததால், இன்றைய மேற்கத்திய சமுதாயம்போல் காதல் திருமணங்கள் நடைபெற்றன. இதே காலத்தில்தான் காமனுக்கும் விழா எடுத்தனர். பங்குனி - சித்திரைக்கு இடையே வரும் பவுர்ணமியிலே இளவேனில் காலத்தில் இவ்விழா தொடங்கும். ஆட்சி செய்யும் மன்னனின் அரசு அறிவிப்பு கேட்டதும் மக்கள் தங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிப்பார்கள். பாட்டு, கூத்து, பட்டிமன்றம் எனத் திருவிழாவுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களும் தங்குதடையின்றி அரங்கேறும். இதில், பொதுமக்கள் தம்மிடையே எந்த வேறுபாடுகளும் இன்றி ஒன்றாக இணைந்து கொண்டாடினர்.

இன்றும் தொடரும் விழா: காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் நம் சமுதாயத்தில் பல மதங்களையும் சாதிகளையும் கொண்டுவந்தது, இவற்றை நாமும் தழுவிக்கொண்டோம். இல்லறத்தைவிட துறவறம் சிறந்தது என்ற கொள்கையும் சமுதாயத்தில் தலைதூக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, காதலும் காமமும் தவறானதாக மாறியது. இதனால் கொண்டாடப்பட்ட காமன் எரிக்கப்பட்டான். இதன் பின்னணியில் தன் தவத்தைக் கலைக்க முற்பட்ட காமனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்த புராணக் கதை இருந்தது. திருவிழா துக்க அவதாரம் எடுத்தது. எனினும், காமன் திருவிழா தன் பெயரை மட்டும் இழக்கவில்லை. சில காலம் கடந்த பின் காமன் விழாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, முதல் நாள் இறந்த காமன் மறுநாள் மீண்டும் உயிர்த்தெழுந்தான்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் இன்னமும் காமனை மறக்காமல் கொண்டாடுபவர்கள் உள்ளனர். இன்றும் தஞ்சை மாவட்டத்தின் சில கிராமங்களிலும், கொங்குப் பகுதியான சேலம், கோயம்புத்தூரின் கிராமப் பகுதிகளிலும் காமனை எரிக்கிறார்கள். அந்த நெருப்பிலே காமனின் வில்லாகிய கரும்பையும் எறிகிறார்கள். இரு நாட்களுக்குப் பின் காமன் உயிர்த்தெழுந்ததன் அடையாளமாக, இரு ஆண்கள் காமன் - ரதியாக வேடமிட்டு வீதி உலா வருவதுடன் விழா நிறைவடைகிறது.

இன்றைய ஆந்திரத்தின் பல பகுதிகளில் ‘காமன பண்டுகா’ என காமன் விழா அறியப்படுகிறது. இந்த விழா அங்கும் கிராமத் திருவிழாவாகவே நடைபெறுகிறது. நம் பக்கத்து நாடான இலங்கையிலும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது.

சிலம்பும் மேகலையும்: காமன் விழா ‘இந்திரன் விழா’ எனப் பெயர் மாறியதும் அந்த விழாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. காமனுக்குப் பதிலாக இந்திரன் அவ்விழாவின் நாயகன் ஆனான். மழை வேண்டியும் பயிர் செழிக்கவும் என விழாவின் கருத்து கருப்பெற்றது. இதன் மீதான குறிப்புகள் நம் தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் இந்திரன் விழாவுக்காக ஒரு தனி அத்தியாயம் ஒதுக்கியுள்ளார். அதில் அவர், பூம்புகார் நகரில் இந்திரன் விழா 28 நாட்கள் கொண்டாடப்பட்டதாகச் சுட்டிக்காட்டுகிறார். தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன், இந்திரன் விழா நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் தாக்கமாக மதுரையின் பல பகுதிகளிலும் இந்திரன் விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதை, மதுரையின் சின்னமனூர் செப்பேடுகள் உறுதிப்படுத்துகின்றன. மணிமேகலையில் சீத்தலை சாத்தனார், ‘இந்த விழாவை தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் (தீயதைப் போக்கி நன்மை பெறும் நல்ல நாள்)’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கருத்துகளைப் பின்பற்றத் தொடங்கியவர்கள் சமுதாயத்தில் மேல்தட்டு மக்களாகப் போற்றப்படுகின்றனர். தமிழரின் தொன்மையை ஏதோ ஒரு வடிவில் இன்னும் தொடர்பவர்கள் கிராமத்தார்கள் என்றாகிவிட்டனர். இதனால், அவர்களிடமே காமன் விழா தங்கிப்போனது.