2 கோடி உறுப்பினர் சேர்க்கை: களம் இறங்கும் த.வெ.க.,

2 கோடி உறுப்பினர் சேர்க்கை: களம் இறங்கும் த.வெ.க.,
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன், நாளை முதல் பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது.

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன், நாளை முதல் பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் தி.மு.க., 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில் வீடுதோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசின் திட்டங்களை கூறும் பணியை துவங்கியுள்ளது.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச்செயலர் பழனிசாமி, இன்று முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் துவங்குகிறார்.

இதற்கிடையே, நடிகர் விஜயின் த.வெ.க.,வும் தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. கட்சியின் செயற்குழுவில், முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.

மேலும், கொள்கை எதிரிகளான தி.மு.க., மற்றும் பா.ஜ., உடன் கூட்டணி இல்லை எனவும் விஜய் அறிவித்தார். இந்நிலையில், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன், உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை, பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், மாவட்டச் செயலர்கள் அனைவரும், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை, 'லேப்டாப்' உடன் அழைத்து வர வேண்டும்.

கட்சியின் மற்ற நிர்வாகிகளை, ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்கள் அழைத்து வர வேண்டாம்