உறுப்பினர் சேர்க்கையில் வேகம் குறைந்த தி.மு.க.,வினர்!

பெஞ்சில் அமர்ந்ததுமே பேச துவங்கிய குப்பண்ணா, ''பழனி கோவில்ல, பேட்டரி கார்களுக்கு பக்தர்களிடம் பணம் வசூலிக்கறான்னு பேசியிருந்தோமோல்லியோ..
ஆனா, 'அப்படி எதுவும் நடக்கல... பேட்டரி கார்களை இயக்கவும், மேற்பார்வை பண்ணவும், உடுமலை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் தந்திருக்கோம்... ஒவ்வொரு பேட்டரி கார்லயும், பக்தர்கள் பார்வையில படும் வகையில், புகார் எண்களை எழுதி வச்சிருக்கோம்... ஓட்டுநர்கள் யாரும் கட்டணம் கேட்டதா எந்த பக்தரும் புகார் தரல'ன்னு கோவில் நிர்வாகம் சார்புல சொல்றா ஓய்...'' என்றார்.
உடனே, ''மாவட்ட நிர்வாகம் அலட்சியமா இருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சியில், ஒரே வருஷத்துல நாலு கமிஷனர்களை மாத்திட்டாங்க... இப்ப, பொறுப்பு கமிஷனர்னு ஒருத்தரை போட்டிருக்காங்க... இவரும் அப்பப்ப வந்து தலையை காட்டிட்டு போயிடுறாரு பா...
''இதனால, பிரபல சுற்றுலா தலமான ஊட்டியில், பல மாதமா வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்கு... கழிவுநீர், குடிநீர் தட்டுப்பாடுன்னு நிறைய பிரச்னைகள் இருக்கு... இது சம்பந்தமா, கலெக்டருக்கு புகார்கள் போயும், மாவட்ட நிர்வாகமும் எதையும் கண்டுக்காம இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''கலெக்டர் உத்தரவுல தலையிட முடியாதுன்னு மறுத்துடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்ன விவகாரத்துல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி
சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில், 'தமிழ்நாடு டூரிசம் சொசைட்டி அடையார்' என்ற பெயர்ல தனியார் மதுபான, 'பார்' செயல்படுது... இந்த இடத்தின் உரிமையாளரிடம், 'மனமகிழ் மன்றம் நடத்தப் போறோம்'னு சொல்லிட்டு, முறைகேடா பார் நடத்துறாங்க...
''இந்த சூழல்ல, பார் உரிமத்தை புதுப்பிக்க சென்னை கலெக்டரிடம் விண்ணப்பிச்சிருக்காங்க... கலெக்டரோ, 'நில உரிமையாளரின் தடையில்லா சான்று இல்லாம உரிமத்தை புதுப்பிக்க முடியாது'ன்னு மறுத்துட்டாருங்க...
''கலெக்டர் உத்தரவை எதிர்த்து, பார் தரப்புல ஐகோர்ட்டுக்கு போயிருக்காங்க... ஐகோர்ட், 'முறையான வாடகை ஒப்பந்தம் பயன்பாட்டுல இல்லாத சூழல்ல, சட்டத்துக்கு புறம்பா வாடகைதாரர் பார் உரிமத்தை புதுப்பிக்கவோ, நடத்தவோ முடியாது'ன்னு சொல்லிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பணியில மந்தமாகிட்டாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஆர்வமா கலந்துக்கிட்டாவ... இந்த சூழல்ல, ரேஷன் கடை மாதிரி சில துறைகளின் ஊழியர் நியமனங்கள்ல, ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்கள் பரிந்துரை செய்தவங்களுக்கு வாய்ப்பு தரல வே...
''அதே நேரம், மாற்று கட்சியினரான அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க.,வை சேர்ந்தவங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை போட்டு குடுத்திருக்காங்க... 'இதுக்கு ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகி தான் காரணம்'னு ஒன்றிய நிர்வாகிகள் புலம்புதாவ வே...
''இதனால, சோர்ந்து போன நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையில வேகத்தை குறைச்சுட்டாங்க... 'இவங்க அதிருப்தியை சரி பண்ணாட்டி, சேலம் மேற்கு மாவட்டத்தில் வர்ற சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர் ஆகிய மூணு தொகுதிகள்லயும், தி.மு.க., தேறாது'ன்னு உளவுத்துறையும்மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்