சென்னையில் தந்தை, இரு மகன்களின் உயிரை பறித்த 'கண்ணுக்குத் தெரியாத கொலையாளி' ஜெனரேட்டர் புகை, கார்பன் மோனாக்சைடு, சென்னை

சென்னையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், கடந்த ஜூலை 1 அன்று உயிரிழந்ததாக புழல் காவல்துறை தெரிவித்துள்ளது.
மறுநாள் (ஜூலை 2) சென்னை ஆலந்தூரில் ஜெனரேட்டர் புகை காரணமாக 7 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் கிண்டி அரசு மருத்துவமனையிலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
'ஜெனரேட்டர் மற்றும் எரிவாயு சாதனங்களை உரிய முறையில் கையாளாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்' என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன? சென்னையில் மேற்கூறிய இரு சம்பவங்களிலும் என்ன நடந்தது?
சென்னை புழலில் என்ன நடந்தது?
சென்னையை அடுத்துள்ள புழல் கதிர்வேடு பகுதியில் வசித்து வந்த செல்வராஜ், லாரி போக்குவரத்துக்கான முன்பதிவு அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அரியலூரை சேர்ந்த இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஜூலை 1 ஆம் தேதி இரவு உணவை முடித்துவிட்டு தனது மகன்களுடன் உறங்கச் சென்றுள்ளார்.
மனைவியும் மகளும் ஓர் அறையில் உறங்கியுள்ளனர். தனது மகன்களுடன் வேறு ஓர் அறையில் செல்வராஜ் உறங்கியுள்ளார். மறுநாள் காலையில் (ஜூலை 2) நீண்ட நேரமாகியும் செல்வராஜ் எழுந்திருக்காததால், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரது மனைவி கதவை உடைத்துள்ளார்.
அப்போது வாயில் நுரையுடன் தனது கணவரும் இரு மகன்களும் இறந்துகிடந்ததாக, புழல் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரின் உடலிலும் வேறு காயங்கள் இல்லை என்பதால் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
"தனது மகன்களுடன் செல்வராஜ் உறங்கிய அறை மிகச் சிறிதாக இருந்தது. போலீஸ் உள்ளே சென்றபோது புகை வாசம் அடித்தது. முதல்நாள் இரவு மின்தடை ஏற்பட்டதால் டீசலில் இயங்கும் சிறிய ஜெனரேட்டரை செல்வராஜ் இயக்கியுள்ளார்" எனக் கூறுகிறார், பெயர் குறிப்பிட விரும்பாத புழல் காவல்நிலைய காவலர் ஒருவர்.
சிறிய அளவிலான அந்த அறையில் காற்றோட்ட வசதி இல்லை எனக் கூறும் அவர், "ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகையால் மூவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்" எனக் கூறுகிறார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் ஜெனரேட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைடு வாயு காரணமாக மூவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கார்பன் மோனாக்ஸைடு வாயுவை மூவரும் சுவாசித்ததற்கான (carbon monoxide inhalation) தடயங்கள் நுரையீரலில் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் என்ன நடந்தது?
சென்னை ஜி.எஸ்.டி சாலையில் ஆலந்தூர் அருகில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை (ஜூலை 2) அதிகாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜெனரேட்டர் மூலம் அறைகளுக்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையால் விடுதியின் வரவேற்பறையில் இருந்த நபரும் ஓர் அறையில் தங்கியிருந்த 6 பேரும் மயக்கமடைந்துள்ளனர்.
கிண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரும் காவல்துறையினரும் அவர்களை மீட்டு கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிலரை அனுமதித்தனர். சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி.
புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தற்போது அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்.
காற்றோட்டம் இல்லாத அறைக்குள் ஜெனரேட்டரை இயக்கும் போது அது வெளியிடும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" எனக் கூறுகிறார், சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி
இந்த வாயு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை (Hypoxia) இது ஏற்படுத்துகிறது. ஆக்ஸிஜனைவிட சுமார் 200 மடங்கு ஹீமோகுளோபினுடன் இணையும் ஆற்றல் வாய்ந்ததாக இந்த வாயு உள்ளது" என்கிறார்.
கட்டடங்களில் தீப்பிடித்து எரியும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படாவிட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிப் பேசிய வீ.புகழேந்தி, "தீப்பிடிக்கும் போது அறையில் கார்பன் மோனாக்ஸைடு வாயு பரவுகிறது. இது மரணத்தை ஏற்படுத்துகிறது" எனக் கூறுகிறார்