பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை: தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே புகழாரம்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை ஆகும். எதிர்க்கட்சிகளின் மீது அவர் முழுநம்பிக்கை வைத்தார்.
முதலில் நாடு, அதன்பிறகு மாநிலம், அதற்கு அடுத்து கட்சி, அதன்பிறகே குடும்பம். எந்தவொரு சூழலிலும் நாட்டின் நலனுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் கட்சி, கொள்கை வேறுபாடுகளை மறந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஓரணியாக செயல்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் நாட்டின் நலன் சார்ந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு சுப்ரியா சுலே பேசினார்.