ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி - பெற்றோர்கள் தவிப்பு

ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி - பெற்றோர்கள் தவிப்பு
ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி - பெற்றோர்கள் தவிப்பு

சென்னை: ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் சேர்க்கை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதிலும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். அதன்படி தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதவிர முந்தைய கல்வி ஆண்டுகளுக்கான நிலுவை என சுமார் ரூ.600 கோடி நிதியானது மத்திய அரசால் வழங்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் (2025-26) தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

இது தொடர்பான வழக்கில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் மத்திய அரசு இதுவரை தனது பங்கு நிதியை ஒதுக்கவில்லை. மாநில அரசும் தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான நிதியை விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால் தற்போது ஆர்டிஇ திட்டத்தில் படித்து வரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்த பல்வேறு தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து சமூக ஆர்வலர் நமச்சிவாயம் கூறும்போது, ”ஆர்டிஇ திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால் கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகங்கள் அழுத்தம் தருகின்றன. பிள்ளைகள் நலன் கருதி வேறு வழியின்றி பெரும்பாலான பெற்றோர்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்திவிட்டனர். அரசிடம் இருந்து பணம் வந்த பிறகு அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, ஆர்டிஇ திட்டத்தில் சேர்க்கை பெற்ற குழந்தைகளிடம் சீருடை, புத்தகம் உட்பட பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்து வருகின்றன. தற்போது கல்விக் கட்டணத்தையும் சேர்த்தே வசூலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.