உங்களுடன் ஸ்டாலின்’ - பழனிசாமியின் சந்தேகம்

உங்களுடன் ஸ்டாலின்’ - பழனிசாமியின் சந்தேகம்
உங்களுடன் ஸ்டாலின்’ - பழனிசாமியின் சந்தேகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்துள்ளார். நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளைப் பெற தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கி வரும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் இணைப்பு, ஆதார் மாற்றம் என பொதுமக்களின் தேவைகள் ஏராளம். அவற்றை அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பலமுறை அலைந்தும் நடக்காத பல விஷயங்களை இந்த முகாம்கள் மூலம் பெறுவதற்கான வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.

மக்களிடம் சென்று விண்ணப்பங்களை வழங்குவதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று கூடுதல் தலைமைச் செயலர் அமுதா அறிவித்திருப்பதும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.

மாவட்டத்திற்கு 6 இடங்கள் என தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை பொதுமக்கள் வரவேற்கின்றனர். இதற்காக தனி இணையதளமும் உருவாக்கப்பட்டு எங்கெங்கே முகாம்கள் நடைபெற உள்ளன என்ற விவரங்களும் பட்டியலிடப்பட்டிருப்பது வழக்கமான சடங்காக அமையாமல், மக்கள் குறையைத் தீர்க்க எடுக்கப்படும் உண்மையான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

இந்த சேவைகளைப் பெற மக்கள் எப்போதும் அலைமோதிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாமல் ஆட்சி முடியவிருக்கும் தருவாயில் இந்த முகாம்களை நடத்துவது தேர்தலை மனதில் வைத்து ஆளுங்கட்சியின் பக்கம் மக்களை இழுப்பதற்கான செயல்பாடாகவே தெரிகிறது. இருந்தாலும், தேர்தல் ஆதாயத்திற்காகவே நடந்தாலும், அதன்மூலம் மக்களுக்கு பலன் கிடைக்கிறதென்றால் பாராட்டுவதில் தவறில்லை.

“இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து மொபைல் எண்களும் பெறப்படுகின்றன. அவை திமுக-வின் ஐடி விங் பிரிவிற்கு செல்கின்றன. அதை வைத்து தேர்தல் நேரத்தில் அவர்கள் எதற்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை’’ என்று சேலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் மொபைல் போன் எண்களுடன் இணைக்கப்பட்ட கூகுள் பே மூலம் பணபரிமாற்றம் நடைபெற வாய்ப்பிருப்பதையே அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் எதுவும் நடந்து விடாமல் கண்காணிக்கும் கடமை, தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அரசு சார்பில் நடைபெறும் திட்டங்களையும், கட்சி சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பையும் இணைத்து அதிகார துஷ்பிரயோகம் நடைபெறாமல் அரசு தரப்பில் பார்த்துக் கொள்வதும் அவசியம்.