திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு

திருமணம் செய்து கொள்வதன் நன்மைகள், தீமைகள் என்ன? - சார்லஸ் டார்வின் செய்த பகுப்பாய்வு
எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர்.

சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார்.

இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார்.

அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது.

வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார்.

திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள்

ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக. 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார்.

'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்:

குழந்தைகள் (இறைவன் நாடினால்).

உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்).

விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது).

வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும்.

இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும்.

"இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார்.

"அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின்.