ஊடகத்தினர் மீது தாக்குதல்; வைகோ மீது போலீஸ் நடவடிக்கை தேவை

ஊடகத்தினர் மீது தாக்குதல்; வைகோ மீது போலீஸ் நடவடிக்கை தேவை: சென்னை பிரஸ் கிளப்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
சாத்தூரில் நடந்த ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் "விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று புதன்கிழமை ம.தி.முக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டிருந்த போது தொண்டர்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.
அதனை, படம் பிடித்த பத்திரிகையாளர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேடையில் இருந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அங்கிருந்த தொண்டர்களிடம் பத்திரிகையாளர்களின் ஒளிப்பதிவு கருவிகளை பறிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த ம.தி.மு.க தொண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மூத்த அரசியல்வாதியான வைகோ அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது கடுமையான கண்டனத்திற்குரியது. வைகோ அவர்களின் இந்த செயலையும், பத்திரிகையாளர்களை தாக்கிய மதிமுக தொண்டர்களையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோவின் மீதும் காவல்துறை உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது." என்று சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.