திருப்பூர் திருப்பூர் ரிதன்யா கணவர், மாமியாருக்கு மிகப்பெரிய சிக்கல்.. நம்பிக்கை வந்துவிட்டதாக தந்தை உருக்கம்

திருப்பூர் திருப்பூர் ரிதன்யா கணவர், மாமியாருக்கு மிகப்பெரிய சிக்கல்.. நம்பிக்கை வந்துவிட்டதாக தந்தை உருக்கம்
திருப்பூர் ரிதன்யா கணவர், மாமியாருக்கு மிகப்பெரிய சிக்கல்..

ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது முதற்கட்ட ஆறுதலாக உள்ளது என்றும் நீதி கிடைக்கும் என நம்பிக்கை வந்துவிட்டதாக ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அண்ணாதுரை பேட்டியின் போது கூறினார். ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தது குறித்து வழக்கறிஞரும் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை என்பவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகரின் பேரனான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி காருக்குள் மருந்து குடித்து ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்டார். கடைசி நிமிடத்தில் ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி ஆடியோ அனுப்பி இருந்தார். அதில் தனது இந்த முடிவுக்கு காரணம், தனது கணவன், மாமனார், மாமியார் தான் என உருக்கமாக பேசினார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவியை கைது செய்தனர். இந்தநிலையில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்குமாறு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கு ரிதன்யாவின் தந்தை தரப்பு வக்கீல்கள் மூலமாக இடையீட்டு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை கடந்த 4-ந்தேதி வந்தது. அப்போது கவின்குமார் தரப்பு வக்கீல் காலஅவகாசம் கேட்டதால் வழக்கை 7-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மதியம் முதன்மை மாவட்ட கோர்ட்டில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை மற்றும் அவருடைய தரப்பு வக்கீல்கள் சி.பி.சுப்பிரமணியம், மோகன் குமார், சதீஷ்குமார் ஆகியோர் ஆஜராகி, கவின்குமார் தரப்பினருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தனர்.

கவின்குமார் தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கோரினார்கள். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி குணசேகரன், ரிதன்யா தரப்பின் இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு, கவின்குமார் தரப்பின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு தனியாக விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, "ரிதன்யாவின் கணவர், மாமனார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார். இது எங்களுக்கு முதற்கட்ட ஆறுதலாக உள்ளது. மேலும், எனது மகள் ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் மோகன்குமார், ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றார்.