பாப்பாக்குடி அருகே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனிடம் நீதித்துறை நடுவர் விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 17 வயது சிறுவனிடம் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாப்பாக்குடி காவல் சரகத்துக்கு உட்பட்ட இந்திரா காலனி சமத்துவ புரத்தைச் சேர்ந்தவர் சக்திகுமார் (22). இவர் தற்போது அருகிலுள்ள ரஸ்தாவூரில் வசித்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்களின் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல்துறைக்கு சக்திகுமார் தகவல் அளித்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் மீது சிறுவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சக்திகுமாரை ரஸ்தாவூருக்கு வெளியே உள்ள குளத்துக்கு வரவழைத்த, சிறுவர்கள் தங்களை காவல்துறையினரிடம் மாட்டிவிட்டதாகக் கூறி சக்திகுமாரை அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் சக்திகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அவரை அரிவாளுடன் சிறுவர்கள் இருவரும் தேடியுள்ளனர்.
இதனிடையே, தாக்குதல் தொடர்பாக தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்துப் பணி காவலர்களையும் சிறுவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. சிறுவர்களின் ரவுடித்தனம் குறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து, அராஜகத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் மேலும் ஆத்திரடமடைந்த சிறுவர்கள் உதவி ஆய்வாளரையும், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய காவல் உதவி ஆய்வாளர் அருகிலுள்ள வீட்டுக்குள் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.
அவரை பின்தொடர்ந்து அரிவாளுடன் ஓடிவந்த சிறுவர்கள், அந்த வீட்டின் கதவுகளை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி, உள்ளே இருந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வீட்டிலிருந்த பெண் மற்றும் அவரது மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே காவல் உதவி ஆய்வாளர் முருகன் துப்பாக்கியால் சுட்டதில், சிறுவர்களில் ஒருவருக்கு மார்பில் குண்டுக் காயம் ஏற்பட்டது.
இதனிடையே, காயமடைந்த சிறுவனுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, ஆலங்குளம் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஜெயந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் விசாரணை நடத்தி, வாக்கு மூலம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உதவி ஆய்வாளர் முருகனிடமும் விசாரணை நடத்தினார்.