தமிழகத்தில் 'சார்ஜிங்' கட்டணம் உயர்வு; மின்சார பஸ்களை அதிகரிப்பதில் சிக்கல்

சென்னை:'தமிழகத்தில் மின்சார பஸ்களுக்கான, 'சார்ஜிங்' உள்ளிட்ட கட்டணங்கள் அதிகமாக இருப்பதால், பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என, பஸ் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள், மின்சார பஸ்களை வாங்கி இயக்கவும், அதற்கான சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், 'பிரதமர் இ- - டிரைவ்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஒதுக்கீடு
அதில், 2026க்குள் மின்சார பஸ்களை இயக்க, 11,000 கோடி ரூபாய், சார்ஜிங் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் 2,000; குஜராத் மாநிலம் சூரத், 600; ஆமதாபாத், 1,000; டில்லி 2,800; கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், 4,500 மின்சார பஸ்களை வாங்கி இயக்க, அம்மாநிலங்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளன.
தமிழகத்தில் தற்போது தான், மத்திய அரசு திட்டத்தின் கீழ் நிதி பெற, தனி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு போதிய ஆர்வம் காட்டாததால், தமிழகத்தில் மின்சார பஸ்களை இயக்குவது, போதிய கட்டமைப்புகளை உருவாக்குவது தொய்வாக இருக்கிறது.
அதிகரிப்பு
இதற்கிடையில், தமிழகத்தில் சமீபத்தில் அமலான மின் கட்டண உயர்வினால், மின்சார பஸ்களுக்கான உயரழுத்த கட்டணம், அதாவது சார்ஜிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது
இது, மின்சார பஸ்களை இயக்குவதில், பின்னடைவை ஏற்படுத்தும் என, தனியார் பஸ் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
எரிபொருள் செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பராமரிப்பு செலவு குறைவு போன்ற காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
'பிரதமர் இ- - டிரைவ்' திட்டத்தின் கீழ் நிதியை பெற்று, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள், அதிக அளவில் மின்சார பஸ்களை இயக்கி வருகின்றன.
அதுபோல, தனியார் பஸ்களும் இயக்கப்படுவதோடு, அதற்கான கட்டமைப்புகளும் அதிகம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
நடவடிக்கை
தமிழகத்தில் இதற்கான பணிகள் மெத்தனமாகவே நடக்கின்றன. அத்துடன், மின்சார பஸ்களுக்கான சார்ஜிங் கட்டணமும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறது.
மின் இணைப்பு பெறுவதற்கான ஒரு முறைக்கான கட்டமைப்பு செலவு, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.