பென்ஷன் மட்டும் இத்தனை லட்சமா? பதவி விலகிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு கிடைக்க போகும் சலுகைகள்

டெல்லி: நாட்டின் மிக உயரிய பொறுப்புகளில் ஒன்றான துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ள ஜெகதீப் தன்கருக்கு அரசு சார்பில் என்ன மாதிரியான சலுகைகள் வழங்கப்படும்? டெல்லியில் பங்களா, பென்ஷன் தவிர அவருக்கு கிடைக்க உள்ள சலுகைகள் என்னென்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்..
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ராஜ்யசபா தலைவராக இருந்த குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், கடந்த 21 ஆம் தேதி இரவு திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது உடல்நிலைக்காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்...
ஜெகதீப் தன்கர் ராஜினாமா
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய தினமே அவர் ராஜினாமா செய்ததால், பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றன. குறிப்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க விவகாரத்தில் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த நெருக்கடியே ஜெகதீப் தன்கரை ராஜினாமா செய்ய வைத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன..
இது ஒருபக்கம் இருக்க ராஜினாமா செய்துள்ள ஜெகதீப் தன்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜெகதீப் தன்கருக்கு பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பதவியில் இருந்து விலகினாலும் அவருக்கு ஓய்வு பெற்ற துணை ஜனாதிபதிக்கு உரிய ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது...
என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
சட்ட விதிகளின் படி, 2 ஆண்டுகளுக்கு மேல் துணை ஜனாதிபதியாக இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க சட்டத்தில் விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில், ஜெகதீப் தன்கருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். துணை ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு சம்பளமாக ரூ.48 லட்சம் பெற்று வந்தார்...
அதன் அடிப்படையில் கணக்கிட்டு அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த வகையில், ஜெகதீப் தன்கருக்கு மாதந்தோறும் ரூ.2 லட்சத்துக்கு மேல் ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஓய்வூதியம் தவிர, மேலும் சில சலுகைகளையும் ஜெகதீப் தன்கர் கிடைக்கும்..
பதவிக்காலத்தில் பயன்படுத்தியது போன்று
வாழ்நாள் முழுவதும் அவர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் வசிக்கலாம். தனது உடல் நலனுக்காக தனியார் மருத்துவரை நியமித்துக் கொள்ள அனுமதி உண்டு. டெல்லியில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டால் விமானம் அல்லது ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்..
ஜெகதீப் தன்கர் தனக்கு உதவியாளர்களாக 2 பேரை நியமித்துக்கொள்ள முடியும். இதற்கான செலவை மத்திய அரசு வழங்கும். அவரது மனைவிக்கும் ஒரு உதவியாளர் வழங்கப்படுவார். அவர் வசிக்கும் பங்களாவுக்கு வழங்கப்படும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றுக்கு தேவையான கட்டணத்தையும் மத்திய அரசே செலுத்திவிடும்.
தனது பதவிக்காலத்தில் அவர் பயன்படுத்தியது போன்று வீட்டில் இருக்கைகள் மற்றும் வசதிகளையும் அடிக்கடி புதுப்பித்து பெற்றுக்கொள்ளலாம். 2 செல்போன்களும் அரசு சார்பில் வழங்கப்படும். இவைத் தவிர, அரசு வழங்கும் அறிவிப்புகளுக்கு ஏற்ப அவருக்கு சலுகைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்..