ஏற்றுமதிக்கு திறந்தது வழி... அமெரிக்காவுக்கு பறக்கும் நாமக்கல் முட்டை...

ஏற்றுமதிக்கு திறந்தது வழி... அமெரிக்காவுக்கு பறக்கும் நாமக்கல் முட்டை...
முட்டை நகரம் என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம்...

நாமக்கல்லிலிருந்து ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவிற்கும் ஏற்றுமதியாகியுள்ளது...

முட்டை நகரம் என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் சுமார் 95% பங்கு வகிக்கிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன...

இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன..

நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு சில விதிமுறைகள் உள்ளன.

வெளிநாட்டுக்கு முட்டைகள் (eggs) ஏற்றுமதி செய்ய அரசாங்க ஒப்புதல், சரியான தரச்சான்றிதழ்கள் மற்றும் விலங்குகளின் நலனுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல முக்கியமான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் ஏற்றுமதி உரிமம் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும். முட்டைகளுக்கு தரச்சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்...

இது குறித்து முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் ஜெகன் ராஜேந்திரன் கூறுகையில், “முதல் முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு 21 கண்டெய்னர் வீதம் ஒரு கண்டெய்னருக்கு 4,72,320 முட்டைகளை நாமக்கல்லில் இருந்து நேரடியாக முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

கத்தார் போன்ற நாடுகளில் 60 கிராம் எடையுள்ள 'AA' அல்லது 'A' தர முட்டைகளை மட்டுமே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கல் முட்டைகள் பொதுவாக 55 கிராம் எடையுள்ளது. நாமக்கல்லில் இருந்து முதல் கட்டமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ள நாமக்கல் முட்டைகளை ஏற்கும் பட்சத்தில் அதிகளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும்” என தெரிவித்தார்...