சென்னை தி நகர் பாண்டி பஜாரில் ஏசி அறை.. ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர்களுக்கு அற்புதமான வசதிகள்..பாருங்க

சென்னை: சென்னையில் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் டெலிவரி சேவை செய்யும் நிறுவன ஊழியர்களுக்காக சென்னை திநகர் பாண்டி பஜாரில் ஏசி ஓய்வறை அற்புதமான வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள அந்த ஏசி ஓய்வறைகள் பார்க்கவே அற்புதமாக இருந்தது. அதன் வசதிகள் மற்றும் சிறப்புகள் பற்றி இந்த வீடியோவில் நாம் பார்ப்போம்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது..
இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும் நிலையில், இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பது இல்லை என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே உள்ளது..
இந்நிலையில், இந்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில், ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி சென்னையில் இரண்டு இடங்களில் ஏசி ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. 600 சதுரஅடி பரப்பளவில் ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதோடு 20 இரு சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் செய்யும் முடிகிறது. அதற்கும் வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்டமாக Swiggy, Zomato , ஜெப்டோ, பிக் பாஸ்கெட் போன்ற டெலிவரி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் சோதனை அடிப்படையில், சென்னை அண்ணா நகரில் திறக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்தே, இரண்டாம் கட்டமாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் ஜூலை 18ம் தேதி அன்று திறக்கப்பட்டது
அங்கு சென்று நாம் பார்த்த போது, நல்ல அழகான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருந்ததை காண முடிநத்து. நல்ல குளுகுளு வசதியுடன் இருந்தது. மொபைல் ஜார்ஜிங் வசதி இருந்ததையும் காண முடிந்தது. அரசு கூறியபடியே 25 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. டெலிவரிக்கு இடையில் ஓய்வு எடுக்கக் கூடிய வகையில் பாதுகாப்பாக சுகாதாரமான முறையில் இருந்தது. இதற்கு அடுத்து வேளச்சேரி, மதுரவாயில், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஊழியர்கள், இதை அமைத்து தந்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதேநேரம் ஏசி ஓய்வறையை வரவேற்ற பொதுமக்கள், இதை அரசு நன்றாக அமைத்துள்ளது என்று பாராட்டினார். ஆனால் எப்படி அரசு பராமரிக்க போகிறது என்பதை பொறுத்தே இது எந்த அளவிற்கு பயனுள்ள திட்டமாக இருக்கும் என்பதை கணிக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினார்கள். ஆம்.. அரசு என்ன தான் புதிய வசதிகளை உருவாக்கினாலும், அது தொடர்ந்து பராமரிக்கப்பட்டால் தான் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் காட்சி பொருளாக மட்டுமே இதை மக்கள் பார்ப்பார்கள்..