போட்டியாக களத்தில் வந்த டெஸ்லா கார்.. ஆனந்த் மகிந்திரா கொடுத்த ரியாக்ஷன்! என்ன சொன்னார் பாருங்க

டெல்லி: எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இன்று தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தைகளில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே இவி கார் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் மகிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தள நிறுவன தலைவருமான எலான் மஸ்க் டெஸ்லா எனும் மின்சார கார் உற்பத்தியினையும் செய்து வருகிறார். இவரது டெஸ்லா கார் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஷோருமை திறந்துள்ளது. இந்தியாவிலும் டெஸ்லா கார் விற்பனையை தொடங்க பணிகளை செய்து வந்தார் எலான் மஸ்க்.
இந்தியாவில் டெஸ்லா கார்
ஆனால் சில பல காரணங்களால் டெஸ்லா ஷோரூம் திறப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று எலான் மஸ்கின் டெஸ்லா ஷோருமானது மும்பை குர்லா காம்ப்ளக்சில் திறக்கப்பட்டது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விழாவில் கலந்துகொண்டு ஷோருமை திறந்து வைத்தார்
.டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் இந்த டெஸ்லா ஷோ ரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கார் சந்தைகளில் மகிந்திரா, டாடா, மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய சூழலில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் இந்திய சந்தைகளில் கால் பதித்து இருப்பது ஏற்கனவே கூறிய கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.
ஆனந்த் மகிந்திரா கருத்து
டெஸ்லா கார் நிறுவனம் தனது முதல் ஷோரூமை இந்தியாவில் திறந்து இருப்பது குறித்து இந்தியாவை சேர்ந்தவரும் மகிந்திரா குழுமங்களின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆனந்த மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கக் கூடிய பதிவில், "எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தை இந்தியாவில் வரவேற்கிறேன்.
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன நிறுவனம் தற்போது மேலும் உற்சாகமாகிவிட்டது. போட்டிதான் புதுமையை உந்தும். மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. சார்ஜிங் மையங்களில் உங்களை பார்ப்பதை எதிர் நோக்கியுள்ளேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
டெஸ்லா காரில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன
டெஸ்லா நிறுவனமானது இந்தியாவில் இந்த காரின் விலை என்ன என்பதையும் அறிவித்துள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.60 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது. ஒய் காரின் அடிப்படை மாடலான ரியர்-வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் ரூ.60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒய் எஸ்யூவி எலக்டிரிக் கார், இந்தியாவில் சுமார் $69,766க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியர்-வீல் டிரைவ் மாடலானது முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 466 கிமீ ஆகும். ஹையர் எண்ட் மாடலான ஒய் லாங் ரேஞ்ச் AWD முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் எட்டும். இதன் ரேஞ்ச் 551 கிமீ ஆகும்.
அவசர பிரேக்கிங் (AEB), பிளைண்ட்-ஸ்பாட் உதவி, லேன்-கீப் உதவி, ரிவர்ஸ் மற்றும் பக்கவாட்டு கேமராக்கள், டயர் அழுத்தக் கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.