தேங்காய் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது.. சென்னையில் வாயடைத்து போக வைக்கும் இளநீர் விலை

****AGNISIRAGU****
சென்னை: தமிழ்நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.தேங்காய் விலை மொத்த மார்க்கெட்டில் வேகமாக உயர்ந்து வருவதால், நல்லெண்ணைய் விலையை விடவும் தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.160 வரையிலும், கிலோவுக்கு ரூ.180 வரையிலும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 440 ரூபாய் அளவிற்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 471 ஹெக்டேர் அளவிற்கு தென்னை பயிர் பயிரிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக கோவை மாவட்டத்தில் 88,467 ஹெக்டேர் பரப்பளவும், அதற்கு அடுத்தப்படியாக திருப்பூர் மாவட்டத்தில் 58,550 ஹெக்டேரும் தென்னை பயிர் உள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
தென்னை விளைச்சல்
இதுதவிர திருச்சி, கரூர், ஈரோடு, தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டின் அனைத்த மாவட்டங்களிலும் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்படுகிறது . தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 3வது இடத்தில் இருக்கிறது. பல வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தான் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை, நெகமம், மடத்துக்குளம் உள்பட தேங்காய் அதிகம் விளையும் பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
****AGNISIRAGU***