ரூ.30,000 கோடி முதலீடு..60,000 பேருக்கு வேலைவாய்ப்பு -தமிழ்நாட்டை நோக்கி ஓடி வரும் ஆப்பிள், சாம்சங்!

சென்னை: ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி மையமாக தமிழ்நாடு படிப்படியாக மாறி வருகிறது. ஸ்மார்ட் போன்கள், வாஷிங் மெசின் போன்ற சாதனங்கள் மட்டுமில்லாமல் அவற்றுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழ்நாடு மாறி இருக்கிறது.
மின்னணு சாதன உற்பத்தி திட்டம் : தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்காக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு மாநிலத்தில் எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பிற உதிரி பாகங்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மின்னணு சாதன உற்பத்தி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தத..
60,000 வேலைவாய்ப்புகள்: இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பது 60,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. இது தொடர்பாக மணி கண்ட்ரோல் தளத்திற்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, 2023 ஆம் ஆண்டு தான் அமைச்சராக பொறுப்பேற்ற போது ஆப்பிள் நிறுவன பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அமைப்பினை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய முதல் பணியாக இருந்தது ,அதை அதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
பிராண்ட் தமிழ்நாடு : தற்போது பல்வேறு ஆப்பிள் சப்ளையர்களும் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர் என கூறும் அமைச்சர் டிஆர்பி ராஜா, "பிராண்ட் தமிழ்நாடு" என்பது உலக அளவில் சென்றடைந்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு தன்னுடைய தரமான உள் கட்டமைப்பு , திறன் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் திறமையான ஆளுமை ஆகிய அனைத்திலும் தனித்து நிற்பதாலேயே ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கின்றன என தெரிவித்துள்ளார்
ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மையம்: ஆப்பிளின் பிரதான ஐபோன் சப்ளையரான ஃபாக்ஸ்கான் ஏற்கனவே தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிறுவி இருக்கிறது ,இங்கே உற்பத்தி செய்யப்படும் போன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டாடா நிறுவனமும் ஐபோன் உற்பத்தி ஆலையை அமைத்திருக்கிறது, ஜபில் நிறுவனம் திருச்சியில் ஆலை அமைக்க இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு இந்தியாவின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மையமாகவும் முக்கியமான விநியோகச் சங்கிலியாகவும் மாறி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். உதிரிபாகங்கள் உற்பத்தி: இது தவிர சார்ஜர் மற்றும் பிற உதிரி பாகங்களை தயாரித்து வழங்கக்கூடிய சால்காம்ப் நிறுவனம், கொரில்லா கிளாஸ் உற்பத்தி செய்யக்கூடிய கார்னிங் நிறுவனம் ஆகியவையும் தமிழ்நாட்டில் ஆலைகளை நிறுவி இருக்கின்றன., எனவே ஐபோன் உற்பத்திக்கான அனைத்து பாகங்களும் தமிழ்நாட்டிலேயே கிடைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர்- ஒரகடம் -காஞ்சிபுரம் வழிதடத்திலும், ஓசூர் மற்றும் திருச்சி பகுதிகளிலும் மாநில அரசின் நிதி உதவியோடு மானியத்தோடு உற்பத்தியா ஆலைகளை நிறுவி இருக்கின்றன என அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருக்கிறார்.
நாட்டின் ஏற்றுமதியில் 41% பங்கு: ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி மையத்தை சீனாவில் இருந்து மாற்ற வேண்டுமென இந்தியாவிற்கு வந்தது ,இந்தியாவில் அதற்கு விருப்பமான இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். 2025 ஆம் நிதியாண்டை பொருத்தவரை தமிழ்நாட்டிலிருந்து 14.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன , இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 41.2% ஆகும் . அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .
சாம்சங் ரூ.1,000 கோடி முதலீடு: தமிழ்நாடு அரசு ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான கேமரா, டிஸ்ப்ளே மாட்யூல்கள், சென்சார் உள்ளிட்ட உதிரி பாகங்களின் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதிலும் கவனம் செலுத்துகிறது என குறிப்பிட்டிருக்கிறார் . இது தவிர சாம்சங் நிறுவனமும் தமிழ்நாட்டில் 1000 கோடி ரூபாயை மறுமுதலீடு செய்து இருக்கிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு சாம்சங் உற்பத்தி ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது
சாம்சங் ஆலை: இதனை அடுத்து இங்கே உற்பத்தி பாதிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு பிரச்சினையை சுமூகமாக முடித்துள்ளது. இதன் விளைவாக சாம்சங் மேலும் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு ஆலையில் முதலீடு செய்திருக்கிறது என அவர் குறிப்பிட்டு இருக்கார். இதன் மூலம் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சாம்சங் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. இங்கே ஃபிரிட்ஜ் , டிவி, வாஷிங் மெஷின் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.