வீடு, பயிற்சி மையம் கட்ட வேலு ஆசானுக்கு ரூ.30 லட்சம் கவர்னர் ரவி வழங்கினார்

பத்மஸ்ரீ விருது பெற்ற பறையிசை கலைஞர் வேலு ஆசான் என்றழைக்கப்படும் வேல்முருகனை, கடந்த மார்ச் மாதம் கவர்னர் மாளிகைக்கு அழைத்து, கவர்னர் ரவி கவுரவித்தார்.
அப்போது அவர், பறை இசையை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தும் தன் முயற்சிக்கு ஒரு இல்லம், பயிற்சி மையம் அமைக்க உதவும்படி கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கவர்னர் ரவி தன் விருப்ப நிதியிலிருந்து, அவருக்கு வீடு மற்றும் பயிற்சி கூடம் அமைக்க, முதல் கட்டமாக 30 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இது தொடர்பாக வேலு ஆசானிடம் பேசியபோது, ''கவர்னர் ரவி வழங்கிய நிதியில், விருதுநகர் மாவட்டம் சாத்துார் தாலுகாவில் உள்ள மேட்டமலை கிராமத்தில், வீடு, பயிற்சி மையம் கட்ட இருக்கிறோம்; இது, அடித்தட்டு பட்டியலின மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் பறை இசை அடுத்தடுத்த தலைமுறைக்கும் செல்ல உதவும். இதற்காக கவர்னருக்கு நன்றி,'' என்றார்.
கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி, பிரதமர் தங்குவதற்கென உள்ள பிரத்யேக இல்லத்தில், வேலு ஆசான் குடும்பத்தினரை கவர்னர் ரவி தங்க வைத்தார்.
இது தொடர்பாக வேலு ஆசானிடம் கேட்டபோது, ''ஜனாதிபதி, பிரதமர் தங்கும் அறையில், கவர்னர் ரவி மரபுகளை மீறி என்னை தங்க வைத்து கவுரப்படுத்தியுள்ளார். இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.