ஸ்டார்ட்அப் துறையில் மாஸ் காட்டும் ஆசிரியர்கள்.. தேடி தேடி முதலீடு செய்யும் VC நிறுவனங்கள்..!!

ஸ்டார்ட்அப் துறையில் மாஸ் காட்டும் ஆசிரியர்கள்.. தேடி தேடி முதலீடு செய்யும் VC நிறுவனங்கள்..!!
தேடி தேடி முதலீடு செய்யும் VC நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி கல்லூரிகளான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சையின்ஸ் (IISc), இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் டெக்னாலஜி (IITs), இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (IIITs) மற்றும் BITS Pilani ஆகியவை நீண்ட காலமாக உலகிலேயே திறமையான இன்ஜினியர்களை உருவாக்கி வரும் வேளையில் தற்போது இந்த கல்லூரிகளின் ஆசிரியர்களும் அடுத்தக்கட்டத்திற்கு நகர துவங்கியுள்ளனர்.

ஐஐடி, ஐஐஎஸ்சி கல்லூரிகள் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளன. ஆனால் சமீப காலமாக இந்த ஆராய்ச்சிகள், ஆய்வகங்களை தாண்டி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது

நாட்டின் முன்னணி கல்லூரிகளின் பேராசிரியர்கள் தற்போது தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியை சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வடிவில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்

இந்த முக்கியமான மாற்றத்தை ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள் தீவிரமாக கவனிக்கத் தொடங்கியுள்ளனர், குறிப்பாக Deep Tech துறையில் முன்னணி கல்லூரி பேராசிரியர்கள் துவங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிகரமான நிறுவனமாகவும், அதிகப்படியான முதலீட்டையும் திரட்டி Rockstar ஆக மாறி வருகிறது.

வேகமான வளர்ச்சி: இந்தியாவின் இந்த முன்னணி கல்லூரிகளின் பேராசிரியர்கள் தலைமையிலான Startup நிறுவனங்களின் துவக்கம் ஒவ்வொரு வருடமும் சுமார் 20-30% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. இந்தத் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால், பேராசிரியர்கள் உருவாக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அறிவுசார் உரிமையை (Intellectual Property - IP) அடிப்படையாகக் கொண்டவை மற்றும் உலகளாவில் அளவில் போட்டியிடக் கூடிய திறன் கொண்டவையாக உள்ளது

இதற்கு உதாரணமாக, இன்று இந்தியாவின் மிகப்பெரிய EV நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ஆதர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் தனது பிள்ளையார் சுழியை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மையத்தால் போடப்பட்டது. இது மட்டுமா இதே ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos), இ-பிளேன் (ePlane), ப்யூர் இவி (Pure EV) போன்ற பல நிறுவனங்கள் பேராசிரியர்கள் மூலம் வெற்றிகரமாக வளர்ந்து வருவது. இந்த வெற்றி தற்போது, மற்ற பேராசிரியர்களையும் தொழில்முனைவு (entrepreneurship) பயணத்தைத் தொடங்க ஊக்குவித்து வருகிறது. ஆராய்ச்சி டூ பிஸ்னஸ்: பேராசிரியர்கள் அவர்களின் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிபுணத்துவத்தை சந்தையில் நேரடியாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சந்தையில் இதற்காக அதிகப்படியான வாய்ப்புகளும் உள்ளதால் பேராசிரியர்கள் தங்களுடைய நீண்ட கால ஆராய்ச்சி பணியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முக்கிய தூண்கோளாக உள்ளது.

உதாரணமாக, ஐஐடி மும்பையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், 2021-ஆம் ஆண்டு கோவிட்-19 தொடர்பான தனது ஆராய்ச்சி கட்டுரை பரவலாக பேசப்பட்ட பிறகு, அவர் சொந்தமாக ஒரு molecular diagnostics ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். இது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதேபோல், ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த விண்வெளி பொறியியல் பேராசிரியர் சத்ய சக்ரவர்த்தி தற்போது 6 டீப் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் Co-Founder ஆக உள்ளார். இதில் ஐஐடி மெட்ராஸ் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் தனி ரகம்: ஐஐடி மெட்ராஸ்-ல் மாணவர்கள் மற்றும் போராசியர்கள் இணைந்து சுமார் 457 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளது. இதில் 133 நிறுவனங்கள் பேராசிரியர்களால் இணைந்து நிறுவப்பட்டவை, இந்த பேராசிரியர்கள் இந்த நிறுவனத்திற்கு முக்கிய ஆலோசகர்களாக உள்ளனர்

இதேபோல் ஐஐஎஸ்சி-யில் உள்ள FSID அமைப்பு சுமார் 120 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கியுள்ளது. இதில் 40% நிறுவனங்கள் பேராசிரியர்களால் தலைமையில் இயங்குகிறது. இதேபோல், ஐஐடி மும்பையில் உள்ள Society for Innovation and Entrepreneurship என்ற அமைப்பு 74 பேராசிரியர் தலைமையிலான துவங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். இதில் 27 நிறுவனங்கள் 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டவை. பிட்ஸ் பிலானியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 35-க்கும் மேற்பட்ட பேராசிரியர் தலைமையிலான ஸ்டார்ட்அப் உருவாகியுள்ளன. பேராசிரியர்களின் இந்த மாற்றம் ஏன் முக்கியம்? பேராசிரியர்கள் தொழில்முனைவோராக மாறுவதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, ஆசிரியர்களின் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிபுணத்துவம் சந்தையில் நேரடியாக பயன்படுத்தப்படுவதால், புதுமையான பொருட்கள் அல்லது சேவைகள் இந்தியாவில் உருவாக்கப்படும்.

இரண்டாவதாக, தொழில்முனைவு மூலம் பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சியை உலகளாவிய அளவில் பயன்படுத்தி, மக்களுக்கு பயனளிக்கும் தயாரிப்புகளை உருவாக்க முடியும். இதேபோல் பேராசிரியர்கள் தங்களுடைய புதிய ஆராச்சிக்கு போதுமான நிதியை இந்த முயற்சி மூலம் திரட்ட முடியும் மூன்றாவதாக, இந்த நிறுவனங்கள் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குகிறது. முதலீட்டாளர்களின் ஆர்வம் ஏன் அதிகரிக்கிறது? இந்திய ஸ்டார்ட்அப் துறையில் பணத்தை போடும் முதலீட்டாளர்கள் சமீப காலமாக எதிர்கொள்ளும் பிரச்சனை புதுமையான விஷயம் இல்லாதது தான். இந்த பிரச்சனையை பேராசிரியர் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக தீர்க்கிறது. புதுமையுடன், தனியாக பேட்டென்ட் பெறும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் அளவுக்கு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தகுதி பெறும் காரணத்தால் வென்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் முதல் PE முதலீட்டாளர்கள் வரையில் இத்தகைய நிறுவனங்கள் அதிகம் விரும்பும் விஷயமாக மாறியுள்ளது. நிதி திரட்டல் இந்தியாவின் முன்னணி கல்லூரிகளில் துவங்கப்பட்டு வெற்றிகண்ட நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய பல கைகள் இருந்தாலும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்கவும், ஆரம்பக்கட்ட பணிகளுக்கு நிதியுதவி அவசியம்.

இதற்காக கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் படை அதிகப்படியான நிதியுதவியை கொடுத்து வருகின்றனர். உதாரணமாக ஐஐடி மெட்ராஸ் அண்மையில் ரூ.200 கோடி மதிப்பிலான முன்னாள் மாணவர் நிதியத்தை (IITM Alumni Fund) அறிவித்தது, இது இந்தியாவில் முதல் முறையாக முன்னாள் மாணவர்களின் மூலதனத்தை நேரடியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது