தட்கல் டிக்கெட்! பாட், ஐஆர்சிடிசி முகவரிகள் விற்பனைக்கு!

தட்கல் டிக்கெட்! பாட், ஐஆர்சிடிசி முகவரிகள் விற்பனைக்கு!
தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் இணைப்பு அவசியம் என்ற விதிமுறை வந்த நிலையில், ஐஆர்சிடிசி கணக்குகள் டெலிகிராமில் விற்பனைக்கு வந்துள்ளன.

தட்கல் டிக்கெட் எடுக்க, ஆதார் எண் மூலம் ஓடிபி சரிபார்ப்பு வழிமுறை கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கணினி பாட்கள் அல்லது ஆதார் உறுதி செய்யப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகள் டெலிகிராமில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் பயணங்களின்போது போலி ஆதாா் அட்டை, போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜூலை முதல் தட்கல் முன்பதிவின்போது ஆதாா் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதாவது, தட்கலில் பயணச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்வோா் அவசியம் தங்களது ஆதாரை இணைக்கவேண்டியது அவசியம். இணையவழி மூலமே தட்கல் பதிவு, ஆதாா் இணைப்பு செயல்படுத்தப்படுகிறது.

ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் தட்கல் டிக்கெட் பெற, ஏராளமான பயனர்கள், ஐஆர்சிடிசி செயலி, இணையதளம் அல்லது முன்பதிவு மையங்களில் காத்துக்கிடக்கும் நிலையில், முன்பதிவு தொடங்கிய ஒரு சில வினாடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கையாகி வருகிறது.

அதனைத் தடுக்க ரயில்வே நிர்வாகமும் போராடி வருகிறது. அதற்காக, தட்கல் டிக்கெட் பெற, ஐஆர்சிடிசி முகவரியுடன் ஆதார் எண்ணை இணைத்து, ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதெல்லாம், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் முன் நிற்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது சமூக வலைதளத்தில் (டெலிகிராம், வாட்ஸ்ஆப்) விற்பனைக்கு வந்திருக்கும் கணினி பாட்கள்.

அதுமட்டுமா, ஆதார் இணைத்துள்ள ஐஆர்சிடிசி முகவரிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ஐஆர்சிடிசி முகவரியின் (ஐடி) விலை ரூ.400 என்ற அளவில் விற்கப்படுவதாக ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

அது மட்டுமல்ல, வெறும் 60 வினாடியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் தொழில்நுட்ப பாட்-களும் (Bots) விற்கப்படுகிறதாம். இதன் விலை ரூ.1000 முதல் ரூ.5,000 வரை இருக்கிறதாம்.