குத்தகை விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு உத்தரவு சொல்வது என்ன?

குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராத மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், அதில் இருந்து விவசாயிகளை பாதுகாத்துக் கொள்ள பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புத் தொகை, விவசாயிகளின் பிரீமியத் தொகையை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குறுவை (காரீப்), சம்பா (ராஃபி) பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறுவை பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் ஜூலை 31-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்ய ஷீமா பொது காப்பீடு நிறுவனமும், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் விவசாயிகளிடம் இருந்து காப்பீடு பிரீமியத் தொகையை பெற்று வருகின்றன. ஏக்கருக்கு ரூ.752 பிரீமியத்தை பொது சேவை மையங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் செலுத்தி வருகின்றனர்...
ஆனால், நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்ய முடிகிறது. குத்தகை விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.38 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நிலையில், 179 விவசாயிகள் மட்டுமே, 110 ஏக்கருக்கு பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். இதையடுத்து, தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பழைய படி குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது...