இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

புதுடெல்லி: பிஹாரில் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களையும், இறந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை அனுமதிக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கேள்வி யெழுப்பி உள்ளார். பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மிகச்சரியான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் வெளிப்படையான அணுகுமுறை யுடன் செயல்படுகிறது.
நியாயமான தேர்தல், வலுவான ஜனநாயகத்தின் அடித்தளம் இல்லையா? தகுதியற்ற நபர்களை முதலில் பிஹாரிலும் பின்னர் நாடு முழுமைக்கும் வாக்களிக்க அனுமதிப்பது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது.
இந்த கேள்விகள் குறித்து இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் எப்போதாவது ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, இடம்பெயர்ந்து சென்றவர்களையும், இறந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இருப்பதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஞானேஷ் குமார் கூறினார்.