45 கோடி எங்கே? சென்னையில் திருமலா பால் மேலாளர்.. கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு

சென்னை: சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்த நவீன் பஞ்சலால் என்பவர் 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கண்டுபிடித்த திருமலா பால் நிறுவன தலைமை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மேலாளர் நவீன், வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிகவும் பிரபலமான தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனம் சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் புழல் பிரிட்டானியா நகர் முதல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த 37 வயதாகும் நவீன் பஞ்சலால் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஆகும்.
திருமலா பால் நிறுவனம்
திருமலா பால் நிறுவனத்தின் வருடாந்திர வரவு-செலவு கணக்குகளை அந்த நிறுவன அதிகாரிகள் சரி பார்த்தனர். அப்போது ரூ.45 கோடி கையாடல் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பாக திருமலா பால் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளித்தனர். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது
.பணத்தை தருவதாக ஒப்புதல்
தனிப்படை போலீசார், பால் நிறுவனத்தின் மேலாளரான நவீன் பஞ்சலாலை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், ரூ.45 கோடி கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டதுடன், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறியிருந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தனது அறையில் நவீன் பஞ்சலால் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நேற்று காலையில் அவரது அறை கதவு நீண்டநேரமாக திறக்கப்படவிலலை
நவீன் இருந்த நிலை
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அவர் அங்கு துணியால் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்து வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் நவீன் பஞ்சலால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவீன் முடிவு ஏன்
பணம் கையாடல் செய்த விவகாரம் பால் நிறுவனத்துக்கு தெரிந்து விட்ட நிலையில், போலீசில் புகார் செய்துவிட்டனர். தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என பயந்து போன நவீன் பஞ்சலால் உயிரை விட்டு இருக்கலாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் கையாடலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் உடல் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மரணம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
போலீஸ் துணை கமிஷனருக்கு தொடர்பு?
தனியார் பால் நிறுவன மேலாளர் விவகாரத்தில், சென்னையில் உள்ள ஒரு போலீஸ் துணை கமிஷனர் ஒருவருக்கு தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. விசாரணை என்ற பெயரில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சென்னை மாநகர போலீ்ஸ் கமிஷனர் அருணுக்கு சென்ற நிலையில், அவர் உடனே விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேற்கு மண்டல இணை கமிஷனர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.விசாரணையின் முடிவில் தான் யாருக்கு என்ன தொடர்பு என்பது தெரியவரும். அதேநேரம் அந்த 45 கோடி பணம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது