சென்னை | தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: பழைய ஸ்கேன் இயந்திரம் வாங்கி விற்கும் தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை, சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு தனியார் நிறுவன உரிமையாளரான கொளத்தூர், பூம்புகார் நகரைச் சேர்ந்த ஏகன் (39) என்பவரது அறிமுகம் கிடைத்து உள்ளது.
ஏகன், பழைய ஸ்கேன் இயந்திரத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதை புதுப்பித்து விற்பனை செய்தால் அதிக விலைக்கு வாங்குவதற்கு ஆட்கள் இருப்பதாகவும், தற்போது ஒரு ஸ்கேன் இயந்திரம் ரூ.15 லட்சத்துக்கு உள்ளதாகவும், அதை வாங்கி புதுப்பித்தால் ரூ.30 லட்சம் வரை விற்பனை செய்யலாம் என்றும், அதில் வரும் லாபத்தை நாம் இருவரும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தினகரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய தினகரன், ராஜாவின் வங்கிக் கணக்குக்கு ரூ.15 லட்சத்தை அனுப்பியுள்ளார். பணம் பெற்றுக் கொண்ட ராஜாவை அதன் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினகரன் இது தொடர்பாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் ரூ.15 லட்சம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஏகன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.