உயிலில் பூர்வீக சொத்து? உயில் எழுதுவதன் நோக்கம்! சொத்துக்கள் உரிமை மாற்றத்தில் இது மிகவும் அவசியம்

சென்னை: உயிலை எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சட்ட வல்லுனர்கள் பல்வேறு அறிவுரைகளை கூறுகிறார்கள். அவைகள் என்னென்ன தெரியுமா? உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்? விருப்ப உறுதி ஆவணம் என்றால் என்ன? அதுகுறித்து பதிவுத்துறை சொல்வதென்ன? அனைத்தையும் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒருவர் தன்னுடைய மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்களை யாருக்கு, எப்படி பகிரப்பட வேண்டும்? என்பதை தெளிவாக சொல்லப்படும் ஆவணம்தான் உயில்..
உயில் எழுதி வைப்பதால், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படக்கூடிய குழப்பங்களையும், சண்டைகளையும் தவிர்க்க முடியும்.. தன்னுடைய மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோருக்கு தேவையான பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
உயில் இல்லாவிட்டால், சொத்துக்கள் பகிரப்படுவது சட்டப்படி முடிவு செய்யப்படும்... ஆனால், இதற்கு காலங்கள் பிடிக்கும்.. குடும்ப உறுப்பினர்களிடையே தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தும்.. ஒருவர் எழுதிய உயிலை எந்த நேரத்திலும் மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம்..
உயில் எழுதியதுமே, நம்பிக்கைக்குரிய 2 நபர்களிடம் அதுபற்றி தெரிவிப்பது நல்லது.. அதேபோல, உயிலை எழுதி கையெழுத்து போட்டாலும், இடது கை பெருவிரல் ரேகையும் பதிக்க வேண்டும். 2 பேரின் சாட்சி
உயிலை பதிவு செய்வது கட்டாயமில்லை.. இது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்தது என்றாலும், உயிலை பதிவு செய்துவிடுவது நல்லது.. ஏனென்றால், பதிவு செய்யப்பட்ட உயிலுக்குதான் நீதிமன்றம் எப்போதுமே முன்னுரிமை தரும்.. இதனால் வாரிசுகளுக்கும் பிற்காலத்தில் பிரச்சனை, குழப்பம் வராது...
வக்கீல், ஆவண எழுத்தர் அல்லது நன்றாக விவரம் தெரிந்தவர் ஆகியோர் மூலமாக உயில் எழுதுவது பாதுகாப்பானது.. உயில் எழுதுபவர்கள் தங்களது சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தினை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும்...பூர்வீக சொத்தை உயில் எழுதி வைக்க இயலாது.
கிரயப்பத்திர எண்கள்
உயிலில், சொத்துகள் பற்றிய முழுவிவரங்கள், குறிப்பாக, சர்வே எண், வீட்டின் அளவுகள், பட்டா எண்கள், கிரயப்பத்திர எண்கள் போன்ற எண்களை தெளிவாக எழுதவேண்டும்.-.. யாருக்கு எழுதிவைத்தாலும், அவரது உறவுமுறை என்ன? பெயர் என்ன? எழுதி வைக்கப்படும் வீட்டின் அளவு போன்றவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அப்பார்ட்மென்ட் வீடு, மாடி வீடாக இருந்தாலும், அதில் எந்த பகுதியை பிரித்து, யாருக்கு எழுதுவது என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்...
வாரிசுகளுக்கு சொத்து எழுதும்போது, பேரக் குழந்தைகளை பெயர்களை சரியாக குறிப்பிட வேண்டும்.. குழந்தைகளை அழைக்கும் செல்லப்பெயர்களை உயிலில் சொல்லக்கூடாது..
சார் பதிவாளர் அலுவலகம்
அதேபோல, உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ அங்கு பதிவு செய்யலாம்.. சொத்துக்களின் மதிப்புக்கேற்ப பதிவு கட்டணம் மட்டும் பெறப்படும். உயில் பதிவுக்கான தாக்கல் செய்ய கால வரம்பு எதுவும் கிடையாது..
உயில்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து, மாவட்டப் பதிவாளரிடம் பாதுகாப்பாக 'டெபாசிட் கொள்ளலாம்.. அப்போதுதான், ஆயுட்காலத்திற்குள் உயிலை திரும்பவும் பெற இயலும்.. உயிலை எழுதியவர் இறந்துவிட்டால், அவருடைய இறப்புச் சான்றிதழுடன், உரியவர் விண்ணப்பம் செய்யும்போது, மாவட்டப் பதிவாளரால் உறை பிரிக்கப்பட்டு உயில் ஆவணம் பதிவு செய்யப்படும்
ஆனால், பதிவு செய்யப்பட்ட உயிலுக்கான சான்றிடப்பட்ட நகலை, அதனை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்வரை அவர் மட்டுமே பெற முடியும்.. உயிலை எழுதிக் கொடுத்தவர் இறந்தபிறகு அவருடைய இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்து யார் வேண்டுமானாலும், சான்றிடப்பட்ட நகலை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அசையாத சொத்துக்களை பொறுத்து, விருப்ப உறுதி ஆவணம் என்ற உயில் எழுதப்பட்டிருந்தால், சென்னை ஹைகோர்ட் மூலம் அது உண்மை என்று நிரூபணம் செய்யப்பட்ட பிறகே சட்டப்படி அதை செயல்படுத்த இயலும் என்று பதிவுத்துறை கூறுகிறது.