டீக்கடை இல்லாம தினமும் 16,000 பேருக்கு டீ, காபி - மதுரை பைலட்டின் Cup Time கதை | `StartUp' சாகசம் 33

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த தேநீர்க் கடைச் சங்கிலிகள், இன்று என்ன நிலையில் இருக்கின்றன என்பதை அந்த நிகழ்ச்சி காட்டியது. இது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல, வணிக உலகில் திணிக்கப்படும் திட்டங்களுக்கும், உண்மையிலேயே சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கச்சிதமாகக் காட்டுகிறது.
உண்மையில், ஒவ்வொரு வணிகமும் தன் சந்தை வாய்ப்பைப் பெறுவது அதன் தேவையின் அடிப்படையில்தான். வணிகம் என்பது தேவையை கருத்தில் கொள்வது, திணிப்பது அல்ல! ஆனால், நாம் பெரும்பாலான நேரங்களில் இந்தத் திணிப்பைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சந்தையைச் சரியாக அலசாமல், பெரும் முதலீட்டில் களத்தில் குதிப்பது உண்மையில் ஒரு பெரிய சவால்
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தேநீர் உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய தேநீர் நுகர்வோராகவும் திகழ்கிறது. தேநீர் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு கலாசாரப் பானம். இந்தியாவில் ஒரு நபரின் சராசரி ஆண்டு தேநீர் நுகர்வு சுமார் 840 கிராம்! நகர்ப்புறங்களில் இது 925 கிராமாகவும், கிராமப்புறங்களில் 797 கிராமாகவும் உள்ளது.
இந்தியாவில் தேநீர் விநியோகச் சந்தை ஒரு வலுவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சரியான சந்தைப்படுத்தல் உத்திகள், வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் நிலையான புதுமைகளுடன், தேநீர் விநியோக வணிகங்கள் இந்த வளர்ந்து வரும் சந்தையில் பெரும் வெற்றியைப் பெற முடியும்.
இந்தச் சந்தையை மிகச்சரியாக ஆராய்ந்து அதை சரியாகப் புரிந்துகொண்டு, மதுரை மாநகரை மையமாகக் கொண்டு ஒரு நிறுவனம் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. அவர்கள் தேநீர்க் கடைகளுக்குப் பதிலாக, ஒரு பிரமாண்டமான தேநீர் மற்றும் காபி உற்பத்தி மையத்தை அமைத்து, மதுரை முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு தினமும் 16,000 பேருக்கு தேநீர் மற்றும் காபி விநியோகம் செய்து வருகின்றனர்.
இது வெறும் டீக்கடை அல்ல!
கப் டைம் (Cup Time) நிறுவனம் ஒரு உணவு நிறுவனமகச் செயல்பட்டு, 8 வகையான பானங்களுடன் தொடர்ந்து மதுரை முழுதும் விநியோகம் செய்து வருகிறது, இப்போது கோயம்புத்தூரிலும் கிளையை ஆரம்பித்துள்ளது. இது,சந்தையின் தேவையை உணர்ந்து, புதுமையான முறையில் அதை அணுகினால், வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு அருமையான உதாரணம். கப் டைம் (Cup Time) நிறுவன சாகசக் கதையை அதன் நிறுவனர் பிரபாகரன் வேணுகோபால் அவர்கள் நம்மிடையே பகிர்கிறார்.
எல்லோருமே டீ கடைகளுக்கு கிளைகள் எடுத்து செயல்படுத்தும்போது நீங்கள் வணிக நிறுவனங்களை மட்டுமே இலக்காக வைத்து சிறு, குறு, பெரும் நிறுவனங்களுக்கு சந்தா அடிப்படையில் டீ விநியோகிக்கலாம் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?”
``அடிப்படையில் என்னுடைய குடும்பம் தங்க நகைக்கடை வணிகம் செய்யும் குடும்பம், பைலட் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆர்வம். குடும்பத்தினரும் பைலட் பயிற்சி முடிக்க ஒரு நிபந்தனையுடன் அனுமதித்தனர். 5 ஆண்டுகளுக்கு என்னுடைய ஆர்வத்தில் தொடர்ந்தாலும், மீண்டும் குடும்பத் தொழிலுக்குள் வரவேண்டும். எனவே அமெரிக்காவில் பைலட் பயிற்சி முடித்த பின் பைலட் பயிற்சியாளராக பணிபுரிந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட காலமும் அதற்குள் முடிவடைந்தது. ஊருக்கு வந்து குடும்பத் தொழிலை கவனித்து வந்தேன். அப்போது எங்கள் வணிகத்தில் நான் கண்டறிந்த ஒரு சிக்கல் என்னென்னவென்றால் நகைக்கடையில் நல்ல கூட்டம் உள்ள நேரத்தில் வாடிக்கையாளருக்கு டீ, காபி வாங்கி வர ஆட்களை அனுப்புவோம். அவர் சென்ற நேரம் பார்த்து கூட்டம் இன்னும் அதிகரிக்கும், அந்த ஒருவர் டீ வாங்க செல்லாமல் இருந்திருந்தால் வாடிக்கையாளரை கவனித்திருக்கலாம், அது வணிகத்தை அதிகப்படுத்தியிருக்கும்.
அதே நேரத்தில் ஒரு நிறுவனம் காபி மேக்கர் இயந்திரம் வைத்திருந்தால் அதன் பராமரிப்பு, மூலப்பொருள் கொள்முதல் என எல்லாமே வைத்திருக்கணும். அதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறவர்களை நமது வாடிக்கையாளருக்கு டீ வாங்கிட்டு வரச்சொன்னாலோ, டீ போடச்சொன்னாலோ மனதுக்கும் எரிச்சல் படுவார்கள். மதுரையில் தங்க நகைக்கடை வணிகம் செய்யும் சிறு குறு நிறுவனங்கள் 3000 -ம் மேல் கடைகள் இருக்கு, அப்போ எல்லாருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கும். அப்ப எல்லா கடைகளுக்கும் டீ, காபி குறிப்பிட்ட நேரத்தில் வழங்கினால் நன்றாக இருக்குமே என்ற அடிப்படையில் ஆரம்பித்தது தான் கப் டைம்.”
ஒரு விமான பைலட் ஆக இருந்த நீங்கள் திடீரென கடைகளுக்கு டீ கொடுக்கப்போகிறேன் என்று சொல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? உங்கள் குடும்பத்தினர் மனநிலை எப்படி இருந்தது?”
``விமான பைலட் ஆக இருந்துட்டு இலட்சக்கணக்கான சம்பளத்தை விட்டுட்டு டீ காப்பி வணிகம் செய்யப்போகிறேன் என்று சொல்லும்போது என்னுடைய குடும்பத்தினர் ரொம்பவே யோசித்தார்கள், மற்ற வணிகமானால் பரவாயில்லை. அதுவும் பைலட் ஆக இருந்து இப்படி செய்கிறாயா என்று என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள், பார்க்கிறவர்கள் எல்லாம் என்னை பைத்தியக்காரனா நீ அப்படி என்று எல்லாரும் கேட்டார்கள், ஒரு கட்டத்தில் அதுவே நான் சாதித்து காட்டணும் என்னு ஒரு வெறி உருவாகியிருந்தது, டீ காபி டெலிவரியை நாங்கள் ஒரு கிளவுட் கிட்சன் போல ஒரு இடத்தில் டீ/காபி உற்பத்தி மையத்தைக் உருவாக்கி ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளுடன் (சிஸ்டம்) செய்யணும், அதுவும் புதிய வணிக யுக்தியாக, ஒரு பேர் சொல்லும் பிராண்டாக இருக்கவேண்டும் என்றும் எண்ணம் உருவாகியது
உங்கள் சந்தையில் நீங்கள் ஆரம்பத்தில் சந்தித்த தடைகளை எதிர்கொள்ள என்ன உத்திகளைப் பயன்படுத்தினீர்கள்?”
``பொதுவாக எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களின் தொழிலில் வேலை ஆட்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு டீ மற்றும் காபி தேவைப்படும். அவர்களின் வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில், நாங்கள் அவர்களின் இடத்திற்கே சென்று டெலிவரி செய்கிறோம். இந்த தொழில் பருவநிலைக்கு ஏற்ப செய்யும் வணிகம் கிடையாது மற்றும் எல்லோராலும் தினமும் பயன்படுத்தத் தேவையானது. ஒருநாள் எங்கள் சுவையில் தரம் குறைந்தாலும் வணிகம் பாதிக்கப்படும். எனவே புதிய நிறுவனமாக இருந்தாலும் நம்பிக்கை ஏற்படுத்துவது மற்றும் நமது சேவையின் தரத்தை எடுத்துச் சொல்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதற்காக நாங்கள் சில முக்கியமான உத்திகளை பயன்படுத்தினோம்.
Free Sample - இதனால் வாடிக்கையாளர்கள் எங்களை பரிசோதிக்கத் தயங்கவில்லை.
Quality - தரமான சேவையை சீராக வழங்கியதால் எங்களது வாடிக்கையாளர்கள் மற்ற புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்தனர்.
Market research and competitive analysis - இதன் மூலமாக நாங்கள் எங்கே வேறுபட வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட்டோம்.
SOP - Standard Operating Procedure - எங்களது business-ல் operation challenge-ஐ கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
Customer satisfaction - வாடிக்கையாளர் கருத்துகளை சீராக கேட்டு, உடனடி சேவை திருத்தங்களை மேற்கொண்டோம். இது நம்பிக்கையை ஏற்படுத்த உதவியது.